(எம்.ஆர்.எம்.வசீம்)
நாடு எதிர்கொண்டுள்ள எரிபொருள் பிரச்சினை மற்றும் மின் துண்டிப்பு காரணமாக இலங்கை முதலீட்டு சபை மற்றும் தொழிற்சாலைகள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. இதனால் நாட்டின் ஏற்றுமதி வருமானத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுதந்திர வர்த்தக வலய முதலீட்டாளர்களின் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.
இலங்கை முதலீட்டு சபை மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சாலைகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை முதலீட்டு சபை சட்டத்தின் கீழ் இலங்கைக்குள் 14 சுதந்திர வர்த்தக வலயங்கள் இருக்கின்றன. அதற்கு அப்பால் நாடு பூராகவும் மேலும் 280 தொழிற்சாலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன.
இந்த தொழிழற்சாலைகளில் சுமார் 4 இலட்சம் ஊழியர்கள் சேவை செய்கின்றனர். நாடு எதிர்கொண்டுள்ள எரிபொருள் பிரச்சினை மற்றும் மின் துண்டிப்பு காரணமாக இந்த தொழிற்சாலைகளின் நாளாந்த நடவடிக்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் திடீர் மின் துண்டிப்பு ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காக இருக்கும் ஜெனரேட்டர்களே எமத தொழிற்சாலைகளிலும் இருக்கின்றன. அந்த இயந்திரத்தினால் பல மணி நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. இந்த தொழிற்சாலைகளை நிறுவும்போது வெளிநாட்டு முதலீட்டார்களுக்கு தடையின்றி மின்சாரம், தண்ணீர் விநியோகிக்கப்படும் என அரசாங்கம் உறுதிப்படுத்தி இருக்கின்றது.
இவ்வாறான நிலையில் இந்த தொழிற்சாலைகளுக்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குமாறு கேடுக் கொண்டபோதும் கட்டுநாயக்க வரத்தக நிலையத்தை தவிர ஏனைய அனைத்து வர்த்தக வலயம் மற்றும் தொழிற்சாலைகளிலும் மின் துண்டிப்பு இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பாக ஜனாதிபதி உடபட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் இலங்கையில் வருடாந்த ஏற்றுமதி வருமானம் 11 பில்லியன் டொலர்களாகும். அதில் ஆடை ஏற்றுமதி தொழிற்சாலைகள் மூலம் 5 பில்லியன் டொலர் கிடைக்கின்றது. ஆடை அல்லாத ஏற்றுமதி தொழிற்சாலைகள் மூலம் 3 பில்லியன் டொலர் கிடைக்கின்றது.
அதன் பிரகாரம் நாட்டின் வருடாந்த ஏற்றுமதி வருமானத்தில் 80 வீத வருமானம் தொழிற்சாலைகள் மூலமே கிடைக்கின்றது. கடந்த கொவிட் நிலைமையிலும் இந்த தொழிற்சாலைகள் செயற்பட்டதால் இலங்கைக்கு ஓரளவேனும் வெளிநாட்டு செலாவணிக்கு டொலர்களை தேடிக்கொள்ள முடியுமாகியது.
எனவே இந்த நிலைமை உணந்து இந்த தொழிற்சாலைகள் பாதிப்பின்ற செயற்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் இந்த தொழிற்சாலைகள் மூடிவிடப்படுவதை தவிர்க்க முடியாமல்போகும். அதன் காரணமாக நாட்டுக்கு தேவையான வெளிநாட்டு செலாவணி குறைவடைந்து விடுவதுடன் பணி புரியும் தொழிலாளர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படுவார்கள் என்றார்.
No comments:
Post a Comment