யுகதனவி அனல்மின் நிலைய உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல். டி. பி. தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில், இன்றையதினம் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கெரவலப்பிட்டியவில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான யுகதனவி அனல் மின் நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் விசாரணையின்றி நிராகரிக்க இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில், முதலில் எல்லே குணவன்ச தேரரினாலும், கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஒரு சில தொழிற்சங்கங்கள் ஆகியன அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
அதன் பின்னர், அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோரால் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த விடயம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை நிதியமைச்சர் முன்வைக்கவில்லை என குறித்த மூன்று அமைச்சர்களும் தமது ஆட்சேபனைகளில் சுட்டிக்காட்டியிருந்தனர். திட்டத்திற்கான டெண்டர் நடைமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய அவர்கள், இச்செயல்முறை மூலம் விண்ணப்பிக்காத நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்குவதற்கான முயற்சிகள் சட்டத்தை மீறுவதாகும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment