அமைச்சர்களாக இருந்த உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கு நீதி கிடைக்கும் வரை தான் அமைச்சரவை கடமைகளில் இருந்து விலகிக் கொள்வதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் (04) அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தான் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை எனவும், அமைச்சு பதவி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் விலகிக் கொள்வதோடு, அமைச்சரவை கூட்டத்திற்கு செல்லப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இதன்போது கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச, தற்போதைய ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை தாம் எதிர்காலத்தில் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வகிக்கப் போவதில்லை என தெரிவித்தார்.
தங்களை அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அத்தகைய தீர்மானத்தை எடுக்குமாறு அழுத்தம் கொடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.
இதன்போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த உதய கம்மன்பில, பொருளாதாரம் பற்றிய புரிதல் இல்லாத ஒருவரால் நாட்டின் பொருளாதாரம் நிர்வகிக்கப்படுவதால் நாடு அதலபாதாளத்தை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவித்தார்.
அரசாங்கத்தில் இருக்கும் போது அரசாங்கத்தை விமர்சிக்கும் போது கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், இன்று பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட அழிவுக்கு காரணமானவர்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் தனக்கு இருப்பதாக கம்மன்பில தெரிவித்திருந்தார்.
நேற்றையதினம் (03), அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர், ஜனாதிபதியினால் அவர்களது அமைச்சு பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
குறித்த இருவரும் அண்மைக் காலமாக நிதி அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்தின் ஒரு சில நடவடிக்கைகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைத்தொழில் அமைச்சர் பதவியில் இருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எரிசக்தி அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மின்சக்தி அமைச்சராக இருந்த காமினி லொக்குகே எரிசக்தி அமைச்சராகவும், போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாச்சி மின்சக்தி அமைச்சராகவும், கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்கவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment