துறைமுக நகரில் சீனா முதலீடு செய்தாலும் அந்நிலம் வெளிநாட்டுக்கு சொந்தமானதல்ல - துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 6, 2022

துறைமுக நகரில் சீனா முதலீடு செய்தாலும் அந்நிலம் வெளிநாட்டுக்கு சொந்தமானதல்ல - துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு

கொழும்பு துறைமுக நகரத்தில் எவ்வித பண மோசடிக்கும் இடமில்லை. அவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை அமுல்ப்படுத்த முடிமென துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகமும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளருமான கலாநிதி பிரியத் பந்து விக்கிரம தெரிவித்தார்.

துறைமுக நகர் முழுமையாக இலங்கைக்குரிய இந்நாட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு நிலமாக இருப்பதோடு, இதில் சீன நிறுவனம் முதலீடு செய்தாலும், அந்த நிலம் எந்த வெளிநாட்டுக்கும் சொந்தமானது அல்ல. குத்தகை அடிப்படையில் அதில் உள்ள காணிகளை எந்தவொரு நாட்டின் நிறுவனத்திற்கும் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கலாநிதி பிரியத் பந்து விக்கிரம சுட்டிக்காட்டினார்.

'துறைமுக நகரமும் எதிர்கால பொருளாதாரமும்' என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், எந்தவொரு முதலீட்டாளரும் குறித்த சட்ட மற்றும் விதிமுறைகளின் பிரகாரம் முதலீடு செய்யலாம்.

துறைமுக நகர் முழுமையாக, இலங்கைக்குரிய இந்நாட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு நிலமாக இருப்பதோடு, அதன் முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற, துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு இலங்கை அரசாங்கம், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

இதில் சீன நிறுவனம் முதலீடு செய்தாலும், அந்த நிலம் எந்த வெளிநாட்டுக்கும் சொந்தமானது அல்ல. குத்தகை அடிப்படையில் அதில் உள்ள காணிகளை எந்தவொரு நாட்டின் நிறுவனத்திற்கும் பெற்றுக்கொள்ள முடியும்.

'துறைமுக நகரம் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்ட ஒரு வலயமாகும்' என்ற கருத்தை நிராகரிக்கின்றோம், இலங்கையில் உள்ள எவரும் துறைமுக நகருக்குள் இலவசமாகப் பிரவேசிக்கலாம்.

இந்நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதில் துறைமுக நகரம் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையும் அதேபோன்று எந்தவொரு இலங்கையரும் இலங்கையில் செல்லுபடியாகும் நாணயங்களைப் பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.

அதன் ஊழியர்களில் 25 சதவீதமானவர்கள் வெளிநாட்டுப் பணியாளர்களாக தொழில்களுக்கு விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதோடு, அதன் மூலம் அவர்களின் சிறப்பான அறிவை உள்நாட்டு தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொள்ளவும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் என்றார்.

மேலும் ஏற்கனவே பல முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். உயர்மட்ட முதலீட்டாளர்களில் இந்நாட்டிற்கு அதிக வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் முதலீட்டாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் ஆணைக்குழுவின் உறுப்பினர் சாலிய விக்ரமசூரிய தெரிவித்தார்.

No comments:

Post a Comment