தமது இயலாமையை மறைக்க அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது பிரயோசனமற்றது : 100 மெகாவோல்ட் மின்சாரம் தேசிய கட்டமைப்பிற்குள் இணைக்கப்படும் - பவித்திரா வன்னியாராச்சி - News View

About Us

About Us

Breaking

Sunday, March 6, 2022

தமது இயலாமையை மறைக்க அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது பிரயோசனமற்றது : 100 மெகாவோல்ட் மின்சாரம் தேசிய கட்டமைப்பிற்குள் இணைக்கப்படும் - பவித்திரா வன்னியாராச்சி

(எம்.மனோசித்ரா)

தமது இயலாமையை மறைப்பதற்காக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது பிரயோசனமற்றது. மக்களை நெருக்கடிகளின்றி வாழ வைப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பதே எமது பொறுப்பாகும். இவ்வாண்டுக்குள் 100 மெகாவோல்ட் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பிற்குள் இணைத்து, மின்சாரத் துறையை மீண்டும் மேம்படுத்துவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

மின்சக்தி அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் பாரிய மின்சார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் பெரும் நம்பிக்கைக்கு மத்தியிலேயே ஜனாதிபதி இந்த பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துள்ளார். தமது இயலாமையை மறைத்துக் கொண்டு அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது பிரயோசனமற்றது.

மக்கள் பிரதிநிதிகளான எமது பொறுப்பு நெருக்கடிகளிலிருந்து தப்புவதற்கோ அல்லது பிரிதொருவர் மீது குற்றம் சுமத்துவதற்கோ முயற்சிப்பதல்ல. மக்கள் பிரச்சினைகளின்றி வாழக் கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதாகும்.

அதற்கமைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து மின்சார நெருக்கடிகளிலிருந்து வெற்றி பெருவதற்கு மக்களுக்கு பலத்தை வழங்க வேண்டும். இதற்கு முன்னர் நான் மின்சக்தி அமைச்சராக கடமையாற்றிய போது இந்த செயற்பாடுகளை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது.

நான் மின்சக்தி அமைச்சினை பொறுப்பேற்கும் போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பாரிய கடன் சுமை காணப்பட்டது. அந்த கடன் தொகையை செலுத்தி, மின்சார சபையை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு என்னால் முடிந்தது.

மின்சக்தி அமைச்சு, மின்சார சபையைப் போலவே ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களும் குறைவின்றி கிடைக்கப் பெற்றமையும் இதற்கான காரணமாகும்.

உண்மையில் அந்த கால கட்டங்களில் மின்சார நெருக்கடி மற்றும் வேலை நிறுத்த போராட்டங்கள் என்பவை காணப்படவில்லை.

அதேபோன்று ப்ரோட்லேன் மற்றும் உமா ஓயா உள்ளிட்ட வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு எம்மால் முடிந்ததோடு, அமைச்சு பதவியிலிருந்து நீங்கும் போது குறித்த வேலைத்திட்டங்களை 75 வீதம் நிறைவு செய்யக் கூடியதாகவும் இருந்தது.

எமக்கு கிடைக்கப் பெற்ற பாரிய வெற்றி யாதெனில் யுத்தம் நிலவிய காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டு மக்களில் 98 சதவீதமானோருக்கு மின் விநியோகத்தை தடையின்றி வழங்க முடிந்தமையாகும். உண்மையில் அந்த யுகம் மிகவும் வெற்றிகரமானதாகவும் பலம் மிக்கதாகவும் காணப்பட்டது.

நாம் மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட்டு, இவ்வாண்டுக்குள் 100 மெகாவோல்ட் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பிற்குள் இணைத்து, மீண்டும் மின்சாரதுறையை நெருக்கடிகள் இன்றி வெற்றி மட்டத்திற்கு மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment