(எம்.எப்.எம்.பஸீர்)
முழுமையாக தடுப்பூசி பெறாதவர்களை பொது இடங்களுக்கு நுழைவதை தடுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு நகர சபையின் உறுப்பினர் பி. நந்த சுலோச்சன பெரேரா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் எம்.டி.ஜே. அபயகுணவர்தன, பண்டாரநாயக்க ஞாபகார்த்த ஆயுர்வேத பரிசோதனை நிறுவனத்தின் பதில் தலைவர் மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்ட 6 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
1897 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தொற்றுநோய் காரணமாக தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் (1954 ஆம் ஆண்டு திருத்தம்) கீழ் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி கட்டளைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாகவும், அதற்கமைய, ஏப்ரல் 30 முதல் முழுமையாக தடுப்பூசி பெறாதவர்களை பொது இடங்களுக்கு நுழைவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் கொரோனா தொற்றுக்கு உள்ளானோருக்கு சிகிச்சையளிக்க சுதேசிய வைத்திய முறைமையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி பெற வேண்டும் என கட்டாயப்படுத்துவது நியாயமற்றது எனவும், இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள உரிமையை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் மனுதரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே, சன்ன ஜயசுமன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, பொலிஸ் மா அதிபர் , சட்ட மா அதிபர் உள்ளிட்ட 12 பேர் இம்மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment