ஜனாதிபதி கோட்டாபாய அரசின் பல உண்மைகளை அம்பலப்படுத்திய விமல், வாசு, கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Friday, March 4, 2022

ஜனாதிபதி கோட்டாபாய அரசின் பல உண்மைகளை அம்பலப்படுத்திய விமல், வாசு, கம்மன்பில

அரசாங்கத்தின் அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நேற்றுமுன்தினம் ஜனாதிபதியினால் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் பொதுஜன பெரமுன அரசில் அங்கம் வகித்த பங்காளிக் கட்சிகளின் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வகித்த வாசுதேசவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட பலர் இணைந்து நேற்று விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி அரசாங்கத்திற்குள் இருந்த பல முரண்பாடுகளை வெளிப்படுத்தினர்.

கொழும்பிலுள்ள சினமன்கிராட்ண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வாசுதேசவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் பல உண்மைகளை வெளிப்படுத்தினர்.

நிதியமைச்சர் பஷிலின் ஜனாதிபதி வேட்பாளர் கனவு எம்மால் இல்லாமல் போனதால் அவருக்கும் பங்காளி கட்சிகளுக்குமிடையில் முரண்பாடு தீவிரமடைந்ததாக விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

குடும்பத்தாரின் அழுத்தங்களினால் ஜனாதிபதி எம்மை பதவி நீக்கினார் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நிதியமைச்சரின் கைப்பொம்மையாக ஜனாதிபதி செயற்படுகின்றார் என்று வெளிப்படையாக விமல் வீரவன்ச கருத்துரைத்தார்.

அமைச்சுப் பதவிகளில் இருந்து விமல் வீரவன்ச, கம்மன்பில ஆகியோரை வெளியேற்றியமைக்கு நீதி கிடைக்கும் வரை அமைச்சின் கடமைகளில் ஈடுபடமாட்டேன் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கீழ் இருக்கும் எந்தவொரு அமைச்சையும் பெற்றுக் கொள்ள நாம் தயாரில்லையொன விமல் வீரவன்ச ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.

அமைச்சு நடவடிக்கையில் ஈடுபடப் போவதில்லை, அமைச்சரவை கூட்டத்திலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று நீர்ப்பாசனத்துறை அமைச்சர் வாசுதேவ தெரிவித்தார்.

நிதியமைச்சின் செயலாளரைக் கூட கட்டுப்படுத்தாத நிலைமையில் ஜனாதிபதி உள்ளார் என விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு நிதியமைச்சர் பஷில் ராஜபக்‌ஷவே பொறுப்புக்கூற வேண்டும் என்று விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அமெரிக்காவின் சூழ்ச்சியில் இருந்து மீள்வதற்கான போராட்டத்தை நாம் இனி தொடர்வோம் என்று உதய கம்மன்பில சூளுரைத்தார்.

எம்மை பதவி நீக்கியமை குறித்து பிரதமர் மனவருத்தமடைந்துள்ளார் எனவும் பிரதமரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்தே நாம் அமைச்சுப் பதவி நீக்கப்பட்டோம் என விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் அரச நிர்வாகத்தில் பலவீனத்தன்மை காணப்படுகிறது என விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

அரசாங்கம் குறுகிய காலத்தில் பலவீனமடைவதற்கு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ச பொறுப்பு கூற வேண்டும் என்று விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அமெரிக்காவினால் நாணய சுத்திகரிப்பு குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கவே நிதியமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ அமெரிக்காவிடம் இலங்கையை காட்டிக் கொடுக்கிறார் என்றார் விமல் வீரவன்ச.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை என விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.

இலங்கையை இந்தோனேசியாவின் கிழக்குத் திமோர் போன்று மாற்றியமைக்கும் ஒப்பந்தத்தை நிதியமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ செயற்படுத்துகிறார் என்று உதய கம்மன்பில தெரிவித்தார்.

அலங்கோல அமெரிக்கரின் பிடியில் ஜனாதிபதி சிக்குண்டுள்ளார் என்று விமல் வீரவன்ச ஆணித்தரமாக தெரிவித்தார்.

நாட்டு மக்கள் வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அலங்கோல அமெரிக்கர் இல்லாதொழித்து விட்டார் என்று விமல் வீரவன்ச கவலையுடன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment