அரசாங்கம் தோல்வியை மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி - ருவன் விஜேவர்தன - News View

About Us

About Us

Breaking

Friday, March 4, 2022

அரசாங்கம் தோல்வியை மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி - ருவன் விஜேவர்தன

(எம்.மனோசித்ரா)

அரசாங்கம் அதன் தோல்வியை மறைப்பதற்காக, மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு முயற்சிக்கிறது. அமைச்சர்கள் இருவரை பதவி நீக்கினால் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என்று மக்கள் நம்புவார்களென அரசாங்கம் எண்ணுவதாக ஐக்கிய தேசிய கட்சி விசனம் தெரிவித்துள்ளது.

கட்சி செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஐ.தே.க. பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் அதன் தோல்வியை மக்களிடம் மறைக்க முயற்சிக்கிறது. நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி அதன் விசனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. அரசாங்கம் மக்களை முட்டாள்களாகவே நோக்குகின்றது. அமைச்சர்கள் இருவரை பதவி நீக்கினால் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடும் என்று மக்கள் நம்புவார்கள் என்று அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கிறது. இது எமது கவனத்தை திசை திருப்புவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சியாகும்.

நாட்டில் நிலவுகின்ற டொலர் நெருக்கடிக்கு அமைச்சரவையில் திருத்தங்களை மேற்கொள்வது பொறுத்தமானதல்ல. மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் அவற்றை தீர்ப்பதற்கு அரசாங்கம் எவ்வித முயற்சிகளையும் முன்னெடுப்பதாக தெரியவில்லை.

முதலாவதாக பால்மா தட்டுப்பாடு, அதனைத் தொடர்ந்து சீமெந்து தட்டுப்பாடு, தொடர்ந்து சமையல் எரிவாயு, எரிபொருள் என்பவற்றோடு தற்போது நாளொன்றுக்கு 7 மணித்தியால மின் துண்டிப்பும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சமையல் எரிவாயுவின் தட்டுப்பாட்டின் அடுத்த சுற்றினை எம்மால் அவதானிக்க முடியும். அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது?

ஐக்கிய தேசிய கட்சி கடந்த 18 மாதங்களாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தது. எனினும் அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது. அவ்வாறெனில் இந்த நெருக்கடிக்கு இவர்களது தீர்வு யாது?

நாட்டிலுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும். அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பினை வழங்குவதற்கு நாம் முன்வந்த போதிலும், அவர்களை அதனை உதாசீனப்படுத்தியுள்ளனர். அவர்கள் தற்போது மக்களையும் உதாசினப்படுத்துகின்றனர். இந்த அரசாங்கத்தினை ஆட்சியிலிருந்து அனுப்புவதற்கு மக்கள் வீதிக்கு இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.

No comments:

Post a Comment