சர்வதேச நாடுகள் தம்மால் இயலுமான உதவிகளை வழங்க வேண்டும் : நாம் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்துச் செயற்படுகின்றோம் - சஜித் பிரேமதாஸ - News View

About Us

About Us

Breaking

Thursday, March 31, 2022

சர்வதேச நாடுகள் தம்மால் இயலுமான உதவிகளை வழங்க வேண்டும் : நாம் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்துச் செயற்படுகின்றோம் - சஜித் பிரேமதாஸ

(நா.தனுஜா)

இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமான நெருக்கடிநிலைக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் இதிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகள் தம்மால் இயலுமான உதவிகளை வழங்குவதற்கு முன்வர வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வெளிநாட்டுத் தூதுவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் சர்வதேச நாடுகள் சிலவற்றின் இலங்கைக்கான தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (31) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஓமான் தூதுவர் ஜுமா அல்ஷிஹி, குவைத் தூதுவர் கலஃப் பு தாஹைர், இந்தோனேசியத்தூதுவர் டெவி கஸ்டினா டொபிங், பாகிஸ்தான் தூதுவர் உமர் ஃபரூக் புர்கி, துருக்கி தூதுவர் டெமெற் செகெர்சியோக்லு, பாலஸ்தீனத்தூதுவர் சுஹைர் ஸைர், மாலைதீவு தூதுவர் யங் தாய் றன் ஆகியேர்ர கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்தும் தமது கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் வெளிநாட்டுத் தூதுவர்களிடம் தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதாரம் தற்போது மிக மோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதுடன் இந்த நெருக்கடியானது நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் சர்வதேச நாடுகள் பலவும் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்கி வரும் அதேவேளை, இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாததாக இருக்கின்றது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பல்வேறு துறைகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டதுடன் அதன் பின்னரான தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் மக்கள் மிக மோசமான தாக்கங்களை எதிர்கொண்டுள்ளனர். எனவே ஏனைய நாடுகள் இயலுமான உதவிகளை இலங்கைக்கு வழங்க முன்வர வேண்டும்.

அதேபோன்று பிரதான எதிர்க்கட்சியான நாம் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்துச் செயற்படுகின்றோம். குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, அதற்கு எதிராக நாம் தொடர்ந்து குரலெழுப்பினோம்.

இந்த நாட்டின் அனைத்து இன, மத சமூகங்களின் உரிமைகளுக்காகவும் முன்னின்று செயற்பட்டு வந்திருக்கின்றோம். இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம் ஆகியவற்றின் ஊடாக ஒருபோதும் நாட்டைக் கட்டியெழுப்பமுடியாது என்று சுட்டிக்காட்டினார்.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்களைச் செவிமடுத்த சர்வதேச நாடுகளின் தூதுவர்கள், இந்த நெருக்கடிக்கான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடிமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment