அரசாங்கத்தை நம்பி புலம்பெயர் இலங்கையர்கள் நாட்டில் முதலீடுகளை செய்ய வரப்போவதில்லை - அனுரகுமார திசாநாயக - News View

About Us

About Us

Breaking

Thursday, March 31, 2022

அரசாங்கத்தை நம்பி புலம்பெயர் இலங்கையர்கள் நாட்டில் முதலீடுகளை செய்ய வரப்போவதில்லை - அனுரகுமார திசாநாயக

(ஆர்.யசி)

நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமையில் இருந்து மீள வேண்டுமாயின் சர்வதேச முதலீடுகளும், சர்வதேச கடன்களுமே அவசியமாகும். ஆனால் இந்த அரசாங்கத்தை நம்பி புலம்பெயர் இலங்கையர்கள் நாட்டில் முதலீடுகளை செய்ய வரப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

எனவே ராஜபக்ஷ அரசாங்கம் இருக்கும் வரையில் நாட்டினை சரியான பாதையில் கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்தும், வெளிநாட்டு முதலீடுகளின் அவசியம் குறித்தும் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களும், ஊழல் மோசடிகளுமே காரணமாகும்.

நாட்டின் அபிவிருத்திக்காக கடன்களை பெற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை, ஆனால் பெற்றுக் கொண்ட கடன்களை எவ்வாறு அவசியமான அபிவிருத்திகளுக்கு பயன்படுத்துகின்றோம் என்பதே முக்கியமானதாகும்.

அதேபோல் சர்வதேச முதலீடுகள் நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமானதாகவும். ஆனால் முதலீடுகளை சரியான வேலைத்திட்டங்களில் உற்படுத்த வேண்டும். ஆகவே சர்வதேச கடன்களையும், சர்வதேச முதலீடுகளையும் நாம் நிராகரிக்கவில்லை.

கடன்கள் ஒன்றும் குற்றம் அல்ல. ஆனால் இதுவரை காலமாக கடன்களை பெற்றுக் கொண்டு அதனை ஊழலுக்கு பயன்படுத்தியமையே இந்த நெருக்கடிக்கு காரணமாகும்.

நாட்டின் இன்றைய நிலைமையில் நாட்டை நேசிக்கும் தமிழ், சிங்கள, முஸ்லிம் புலம்பெயர் அமைப்புகளின் ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்ள முடியும், ஆனால் இந்த அரசாங்கத்தின் மீதான அவநம்பிக்கை மற்றும் தவறுகள் காரணமாக புலம்பெயர் இலங்கையர்களின் முதலீடுகளையும் உதவிகளையும் பெற முடியாதுள்ளது.

அதேபோல் இனவாத அரசியலும், பிரிவினைவாத கொள்கையும் நாட்டின் இன்றைய நிலைமைக்கு பாரிய பங்களிப்பை செய்துள்ளது.

இன முரண்பாடுகளை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் சந்தேகம், கோபம், வெறுப்புணர்வுகளை உருவாக்கி நாட்டின் ஐக்கியத்தை நாசமாக்கியுள்ளனர்.

இனியும் அவ்வாறான அரசியல் கலாசாரம் நாட்டிற்கு உகந்ததல்ல, சகல தரப்பினதும் கருத்துக்களுக்கு இப்போதாவது இடமளிக்க வேண்டும்.

ஆரோக்கியமான கருத்துக்களை அரசாங்கம் கேட்க வேண்டும். ஆனால் அதனை கேட்க மறுக்கின்றமையே நெருக்கடி நிலைமை மேலும் தொடரக்காரணமாகும்.

இன மத பேதங்களை மறந்து, சகல மக்களும் ஒன்றிணைய வேண்டும் எம்மால் அதற்கு தலைமை வகிக்க முடியும்.

மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் எவரையும் விட்டுவைக்க கூடாது, வெறுமனே கொவிட் வைரஸ் தொற்று மட்டுமே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் அல்ல.

அதையும் தாண்டி நாட்டில் உள்ள ஊழல்கள், மோசடிகள், குற்றங்கள், தவறான அரசியல் தீர்மானங்களே இந்த நிலைமைக்கு காரணமாகும் அதனை இனியாவது மாற்றியாக வேண்டும், அதற்கு மக்கள் சரியாக சிந்திக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment