பதற்றமான நிலைமை கட்டுக்குள் : ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது : தொடர்ந்தும் பாதுகாப்பு பணிகளில் பொலிஸ், இராணுவம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 31, 2022

பதற்றமான நிலைமை கட்டுக்குள் : ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது : தொடர்ந்தும் பாதுகாப்பு பணிகளில் பொலிஸ், இராணுவம்

மிரிஹான பகுதியில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொலிஸ், இராணுவம், விசேட அதிரடிப் படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாற்றமடைந்ததையடுத்து இன்று வெள்ளிக்கிழமை (1) அதிகாலை 12.45 மணியளவில் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொட, களனி மற்றும் கல்கிசை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொட, களனி மற்றும் கல்கிசை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் நுகேகொட, மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (31) இரவு 7.30 மணியளவில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும் குறித்த பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தை நள்ளிரவு வரை தொடர்ந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த கலகமடக்கும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம் தொடர்ந்து இடம்பெற்ற நிலையில் அதனை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டு மற்றும் நீர்த்தாரைப் பிரயோம் மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் விசேட அதிரடிப் படையினர் குறித்த இடத்திற்கு வருகை தந்த பஸ் வண்டியை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

தொடர்ந்து அங்கு ஏராளமானோர் குறித்த பகுதிக்கு வரத் தொடங்கிய நிலையில், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சித்த நிலையில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போதும், அத்தனையும் மீறி போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் உடன் அமுலாகும் வகையில் பொலிஸார் ஊரடங்குச்சட்டத்தை அமுல் படுத்தி நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதேவேளை, போராட்டத்தின் போது இரு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் பொலிஸ், இராணுவம், விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 12.45 மணிக்கு உடன் அமுலாகும் வகையில் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொட, களனி மற்றும் கல்கிசை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment