(நா.தனுஜா)
இரசாயன உர இறக்குமதி தடை செய்யப்பட்டமையை அடுத்து நாட்டின் விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. முன்னொருபோதுமில்லாத அளவிற்கு விவசாயிகள் ஜனாதிபதியைத் தூற்றுகின்றனர். விவசாயத்துறையின் வீழ்ச்சியினால் வெகுவிரையில் உணவுப் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. பயிர்ச் செய்கைக்கு சேதன உரத்தை மாத்திரம் பயன்படுத்துவது குறித்துப் பேசிய அரசாங்கம், இப்போது அதிகளவில் இரசாயன உரத்தைப் பயன்படுத்தும் நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்கின்றது. இவையனைத்தும் எதிர்வரும் காலங்களில் இலங்கையில் மந்தபோசணையினால் பாதிக்கப்பட்ட சந்ததியொன்று உருவாவதற்கு வழிவகுக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, இன்றளவிலே நாட்டில் மக்கள் வாழ முடியாத நிலையொன்று உருவாகியிருக்கின்றது. அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்குக்கூட மக்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அன்றாட வாழ்க்கைச் செலவு வெகுவாக அதிகரித்திருப்பதுடன் பெருமளவானோர் தமது வருமான மார்க்கங்களை இழந்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் தொடர்ந்து நிலவி வரும் நெருக்கடிக்கு இன்னமும் அரசாங்கம் தீர்வு வழங்கவில்லை.
நாட்டின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் கடந்த 1977 ஆம் ஆண்டில் நிலவிய 'வரிசைகளின் யுகம்' அனைவருக்கும் நினைவிலிருக்கும். அப்போது அதனை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டமொன்று காணப்பட்டது.
இருப்பினும் தற்போது எந்தவொரு செயற்திட்டமும் இல்லை. மாறாக உணவுப் பொருட்கள், பால்மா, எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட அநேகமான அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு வரிசைகளில் நிற்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. அதன் காரணமாக மக்களின் நாளாந்த செயற்பாடுகளில் தாமதமேற்படுகின்றது. எனவே இந்த 'வரிசைகளின் யுகம்' மக்களின் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை மறுபுறம் டொலர் பற்றாக்குறை காரணமாக நிதி ரீதியில் நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளது. ஆட்சியாளர்கள் சிறிதும் வெட்கமின்றி வெளிநாடுகளிடம் கையேந்துகின்றனர். அதன் விளைவாக நாட்டின் கௌரவத்திற்கும் நன்மதிப்பிற்கும் களங்கம் ஏற்படுகின்றது.
இலங்கை கடன்களை மீளச் செலுத்த முடியாத நிலையில் இருக்கின்றது என்ற விடயம் பரவலாகப் பேசப்படுகின்றது. கடந்த 2010 - 2015 வரையான காலப்பகுதியிலேயே நாடு கடன் சுமையால் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. நாட்டில் உருவாக்கப்பட்ட எவ்வித இலாபத்தையும் ஈட்டித்தராத அபிவிருத்தித் திட்டங்களே அதற்குப் பிரதான காரணம் என்பதை அனைவரும் நன்கறிவார்கள்.
அவ்வாறு பெறப்படும் கடன் நிதியில் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதே அப்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாகக் காணப்பட்டது. அதன் முறைகேடான செயற்பாடுகளுக்காக மக்கள் தற்போது அரசாங்கத்திற்கு எதிராகக் கடும் விரோதத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
அடுத்ததாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதன் காரணமாக நாட்டின் அன்றாட செயற்பாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தினமும் 7 - 8 மணி நேரம் வரை மின் விநியோகத்தைத் துண்டிக்க வேண்டிய மிக மோசமான நிலையில் உலகின் வேறெந்த நாடுகளும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தற்போது எரிபொருள் இல்லாததன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.
எதிர்வரும் காலங்களில் மின்னுற்பத்திக்கான தேவை காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படும் நிலை தோற்றம் பெறலாம். இந்த எரிபொருள் பற்றாக்குறை மீனவர்கள், விவசாயிகள் உள்ளடங்கலாக பல்வேறு துறைகளைச் சார்ந்து இயக்கக் கூடியவர்களையும் பாதித்திருக்கின்றது. தற்போது அரசாங்கம் அதற்கு மிக நெருக்கமான வணிகர்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கோ அல்லது மட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ தயாராக இல்லை.
அதேபோன்று இரசாயன உர இறக்குமதி தடை செய்யப்பட்டமையை அடுத்து நாட்டின் விவசாயத்துறை முழுமையாக வீழச்சி கண்டுள்ளது. முன்னொருபோதுமில்லாத அளவிற்கு விவசாயிகள் ஜனாதிபதியைத் தூற்றுகின்றனர். விவசாயத்துறையின் வீழ்ச்சியினால் வெகு விரையில் உணவுப் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பயிர்ச் செய்கைக்கு சேதன உரத்தை மாத்திரம் பயன்படுத்துவது குறித்துப் பேசிய அரசாங்கம், இப்போது அதிகளவில் இரசாயன உரத்தைப் பயன்படுத்தும் நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்கின்றது. இவையனைத்தும் எதிர்வருங்காலங்களில் இலங்கையில் மந்தபோசணையினால் பாதிக்கப்பட்ட சந்ததியொன்று உருவாவதற்கு வழிவகுக்கும் என்றார்.
No comments:
Post a Comment