(எம்.ஆர்.எம்.வசீம்)
தேவையான எரிபொருளை பெற்றுக் கொடுக்கா விட்டால் பாடசாலை மாணவர்களுக்கான போக்கு வரத்து சேவையில் இருந்து ஒதுங்கிக் கொள்வோம் என இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குரவத்து சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாணவர் போக்கு வருத்து சேவை சங்கத்தின் தலைவர் எல். மல்சிறித சில்வா குறிப்பிடுகையில், மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்ல பாடசாலை சேவையை மேற்கொள்ளும் வாகனங்களுக்கு டீசல் இல்லாத பிரச்சினை இருந்து வருகின்றது. அதனால் இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எமது வாகனங்களுக்கும் எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்கு வரத்து அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.
நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு காரணமாக பொதுப் போக்கு வரத்து சேவைக்காக தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு இலங்கை போக்கு வரத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை நிரப்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றது.
அதேபோன்று பாடசாலை சேவையை மேற்கொள்ளும் வானங்களுக்கும் அந்த அனுமதியை வழங்குமாறு கேட்டிருந்தோம். இன்று வரை எந்த பதிலும் எமக்கு கிடைக்கவில்லை. அவ்வாறு அனுமதி கிடைக்கா விட்டால் நாங்கள் பாடசாலை மாணவர் போக்கு வரத்து சேவையை மேற்கொள்ள மாட்டோம். ஏனெனில் எரிபொருளுக்காக நீண்ட நேரம் வரிசையில் இருந்து விட்டு மாணவர்களை உரிய நேரத்துக்கு அழைத்துச் செல்வது சாத்தியமில்லை.
அத்துடன் இந்த கோரிக்கையை நாங்கள் சில தினங்களுக்கு முன்பே போக்கு வரத்து அமைச்சருக்கு அறிவித்தோம். என்றாலும் தற்போது புதிய ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். அமைச்சர்கள் மாறுவதால் இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வுகாண முடியாது. புதிய அமைச்சர் தற்போது ஆரம்பத்தில் இருந்து எமது கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும். அதன் பின்பே முடிவுக்கு வருவார். அதனால் இந்த விடயத்தில் கல்வி அமைச்சர் தலையிட்டாவது எமக்கு தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment