(எம்.ஆர்.எம். வசீம் ,இராஜதுரை ஹஷான்)
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமைய அரசாங்கம் செயற்படுகிறது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண அரசாங்கம் எவ்வித திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. கடன் பெற்று உண்ணல், திருடி தின்னல் ஆகியவையே அரசாங்கத்தின் பிரதான கொள்கையாக காணப்படுகிறது. பாராளுமன்றிக்கு பொறுப்புக்கூறும் அமைச்சராக நிதியமைச்சர் செயற்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற பெறுமதிசேர் வரி மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் எவ்வித நடவடிக்கையினையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.
வரி அதிகரிப்பு தொடர்பான சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலைமையில் கூட நிதியமைச்சர் பாராளுமன்றிற்று வருகை தரவில்லை.
இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் சமர்ப்பித்த அறிக்கையை நிதியமைச்சர் பாராளுமன்றில் சமர்ப்பிக்கவில்லை.
மூல வரைபு கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் அதனையும் அவர் பாராளுமன்றில் சமர்ப்பிக்கவில்லை.
நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலைமையில் நிதியமைச்சர் அது குறித்து அவதானம் செலுத்தாமல் தனது சகோதரரான ஜனாதிபதியின் அதிகாரங்களை பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்றிற்கு அப்பாற்பட்டதாக செயற்படுகிறார். பாராளுமன்றிற்கு பொறுப்பு கூறும் ஒரு அமைச்சராக நிதியமைச்சர் செயற்பட வேண்டும்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட வேண்டும், வரி மற்றும் வருமான வரி அதிகரிக்கப்பட வேண்டும், நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைவாகவே எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது பெறுமதி சேர் வரி அதிகரிபப்பு குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கம் 69 இலட்ச மக்களை மாத்திரமல்ல 22 மில்லியன் மக்களையும் ஒட்டு மொத்தமாக பழிவாங்குகிறது.
நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இன்று வரை 21 ரில்லியன் அரச முறை கடனை பெற்றுக் கொண்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று வரையான காலப்பகுதி வரை 8 ரில்லியன் வரையான அரச முறை கடன்களை பெற்றுக் கொண்டுள்ளது.
இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொண்ட கடன்களுக்காக எவ்வித நிபந்தனைகளுக்கும் அடிபணியவில்லை என நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது.
விற்று உண்ணல், திருடி உண்ணல், கடன் பெற்று உண்ணல் ஆகிய கொள்கைக்கமைய அரசாங்கம் செயற்படுகிறது என்றார் .
No comments:
Post a Comment