பங்காளிக் கட்சிகளின் மாநாட்டில் கலந்துகொண்ட பொதுஜன பெரமுனவினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - சாகர காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 3, 2022

பங்காளிக் கட்சிகளின் மாநாட்டில் கலந்துகொண்ட பொதுஜன பெரமுனவினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - சாகர காரியவசம்

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து நேற்றுமுன்தினம் கொழும்பில் 'முழு நாடும் சரியான பாதைக்கு' என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து கட்சியின் ஒழுக்காற்று குழுவில் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

நிகழ்வில் பங்காளி கட்சியின் ஒரு சில தலைவர்கள் குறிப்பிட்ட விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. அமைச்சரவையில் அமைதியாக இருந்துகொண்டு பொதுமக்கள் மத்தியில் கூச்சலிடுவது பயனற்றது எனவும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்துகொள்ள பொதுஜன பெரமுனவிற்கு உத்தியோகப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை.

பொதுஜன பெரமுனவிற்கு அழைப்பு விடுக்கப்படாத நிலைமையில் கட்சியின் உறுப்பினர்கள் அந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறித்து கட்சியின் ஒழுக்காற்கு குழுவில் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகள் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

பங்காளி கட்சியின் தலைவர்கள் பொது இடங்களில் குறிப்பிடும் விடயங்களை அமைச்சரவையில் குறிப்பிடுவதில்லை.

அமைச்சரவையில் அமைதி காத்து விட்டு பொதுமக்கள் மத்தியில் விளம்பரத்திற்காக பொய்யுரைப்பது பொருத்தமற்றதாகும். கூட்டணியாக ஒன்றினைந்து செயற்படவே தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

பங்காளி கட்சிகளின் செயற்பாடு கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் காணப்படுகிறது என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment