போக்கு வரத்துச் சேவைகள் முடங்கினால் ஒட்டு மொத்த நாடும் செயலிழக்கும் - கரு ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Thursday, March 3, 2022

போக்கு வரத்துச் சேவைகள் முடங்கினால் ஒட்டு மொத்த நாடும் செயலிழக்கும் - கரு ஜயசூரிய

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டு மக்கள் முகம் கொடுத்துவரும் நெருக்கடிகளுக்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிபொருள் பிரச்சினை காரணமாக புகையிரத சேவை மற்றும் பேருந்து சேவைகள் முடங்கிவிட்டால் ஒட்டு மொத்த நாடும் செயலிழந்து விடும். அதனால் தற்போதைய நிலையில் உக்ரைன் மக்களைப் போன்று கைகோர்த்துக் கொண்டு ஒன்றிணைந்து தேசிய சமாதான வேலைத்திட்டம் ஒன்றுக்கு ஒன்று கூடுமாறு அனைத்து அரசியல் தலைவர்களையும் கேட்டுக் கொள்கின்றோம் என முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவருமான கருஜயசூரிய தெரிவித்தார்.

சமூக நீதிக்கான தேசிய அமைப்பு வியாழக்கிழமை (3) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உலக நாடுகள் முன்னிலையில் நாடும் நாட்டு மக்களும் பின்னடைவை சந்தித்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் உக்ரைன் மக்களைப் போன்று கைகோர்த்துக் கொண்டு ஒன்றிணைந்து தேசிய சமாதான வேலைத்திட்டம் ஒன்றுக்கு ஒன்று கூடுமாறு நாம் அனைத்து அரசியல் தலைவர்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.

எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றது. விவசாயம் உள்ளிட்ட ஒட்டுமொத்த பொருளாதார செயற்பாடுகளும் அழிவை சந்தித்துள்ளது.

மேலும் நாட்டு மக்கள் முகம் கொடுத்து வரும் நெருக்கடிகளுக்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். மின்சாரத்தை வழங்கும் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்த மின்சார சபைக்கு முடியும்.

புகையிரத சேவை மற்றும் பேருந்து சேவைகள் முடங்கிவிட்டால் ஒட்டு மொத்த நாடும் செயலிழந்து போகும் அபாயம் இருக்கின்றது.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி, நிதி அமைச்சர், மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் மின்சார சபை ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோன்று மின் துண்டிப்புக்கு தற்போது பயன்படுத்தி வரும் நேர அட்டவணைக்கு பதிலாக குறிப்பிட்ட பிரிவுக்கு மின் துண்டிப்பு அமுல்படுத்தும் நேரத்தை திட்டவட்டமாக சரியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

அத்துடன் நாட்டில் மருந்து பற்றாக்குறையும் காணப்பட்டு வருகின்றது. இது மிகவும் மோசமான ஒரு சூழ்நிலை ஆகும்.

மேலும் ஜனவரி மாதத்தில் உணவு பொருட்களின் விலை 24 வீதத்தில் அதிகரித்துள்ளது. அதிக அளவில் பணத்தை அச்சிட்டதே இதற்கு காரணம்.

அண்மையில் வெளிப்பன்ன பிரதேசத்தில் மூன்று நாட்களாக தனது நான்கு பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாத காரணத்தினால், மன உளைச்சலுக்கு ஆளான தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் அவரது மனைவி வீட்டில் இருந்த இரு கதிரைகளை விற்று பிள்ளைகளுக்கு உணவு வழங்கிய சம்பவத்தை ஊடகத்தின் வாயிலாக அறிந்து கொண்டோம்.

நாட்டை நடத்திச் செல்வதற்கு தேவையான 80 சதவீதமான பணத்தை வழங்குவது குறைந்த வருமானத்தை பெறும் மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பணம் படைத்தவர்களுக்கு அதிக அளவிலான வரிச் சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இங்கு சமூக அநீதி ஏற்பட்டு இருப்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லிவிட்டு வழங்கிய வாக்குறுதிகளை பகிரங்க மேடையில் மீறினால் மக்கள் அங்கீகாரம் கிடைக்காது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு 69 லட்சம் வாக்குகள் கிடைத்த போதிலும் 62 லட்சம் வாக்காளர்கள் அவரை அங்கீகரிக்கவில்லை என்பது எமக்கு தெரியும்.

அரசியல் தேவைகளுக்காக அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளும்போது நாடு வீழ்ச்சியை நோக்கி பயணிக்கும் என்பதை 20ஆவது திருத்தத்தை முன்மொழியும் போதே அரசாங்கம் உணர்ந்து இருக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment