கட்டுப்படுத்த முடியுமான பிரச்சினைகளை முறையாக முகாமைத்துவம் செய்ய தவறியதன் விளைவே நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு காரணம் - சுசில் பிரேமஜயந்த - News View

About Us

About Us

Breaking

Thursday, March 3, 2022

கட்டுப்படுத்த முடியுமான பிரச்சினைகளை முறையாக முகாமைத்துவம் செய்ய தவறியதன் விளைவே நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு காரணம் - சுசில் பிரேமஜயந்த

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கத்தினால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமான பிரச்சினைகளை முறையாக முகாமைத்துவம் செய்ய தவறியதன் விளைவே நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு காரணமாகும் என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு பிரதான காரணம் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டை நிர்வகிக்கும்போது எங்களுக்கு கட்டுப்படுத்த முடியுமான சில விடயங்கள் இருக்கின்றன. எங்களால் கட்டுப்படுத்த முடியாத சில விடயங்களும் இருக்கின்றன.

எரிபொருள், கேஸ் போன்றவற்றின் விலை அதிகரிப்பை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறான விலை அதிகரிப்புகள் அடிக்கடி இடம்பெறுவது வழமையான விடயமாகும்.

என்றாலும் எங்களால் முகாமைத்துவம் செய்ய முடியுமான பிரச்சினைகளை கட்டுப்படுத்தி நிர்வகிக்க தேவையான முறையான வேலைத்திட்டம் அமைக்க அரசாங்கம் தவறி இருக்கின்றது. அவ்வாறு இல்லை என்றால் இந்தளவு பாரிய பிரச்சினை ஏற்படப்போவதிலலை.

ஏனெனில் தற்காலத்தில் உள்ள உலக தொற்று நிலைமை, பொருளாதார நெருக்கடி என்பது எங்களுக்கு மாத்திரம் அல்ல ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 195 நாடுகளுக்கும் இருக்கின்றது.

எமக்கு அண்மையில் இருக்கும் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் எமக்கு இருக்கும் பிரச்சினை அவர்களுக்கு இல்லை.

அப்படியானால் நாங்கள் கட்டுப்பத்த முடியுமான பிரச்சினைகளை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுத்தோமா என்ற கேள்வி எழுகின்றது.

அத்துடன் பிரச்சினை ஒன்று தலைதூக்குவதற்கு முன்னர் அது தொடர்பில் எதிர்வுகூற முடியுமான திறமை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு இருக்க வேண்டும்.

குடும்பத்தில், நிறுவனம் ஒன்றில் அல்லது நாட்டில் ஏதாவது சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் இவ்வாறு இடம்பெறலாம் என எதிர்வு கூற முடியுமாக இருக்க வேண்டும்.

எமது நாட்டில் சாதாரணமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் வறட்சி ஏற்படும் காலமாகும். நவம்பர், டிசம்பர் காலங்களில் எந்தளவு அதிக மழை வீழ்ச்சி கிடைத்தாலும் இரண்டு மாதங்கள் வறட்சி ஏற்பட்டால் நீர் வீழ்ச்சிகளில் நீர் வற்றிவிடும். தற்போது நாங்கள் எதிர்கொண்டிருக்கும் மின்சார பிரச்சினைக்கும் சரியான முகாமைத்தும் இல்லாமையே காரணமாகும்.

நாட்டின் மின்சாரம் மற்றும் வலுசக்தி ஆகிய இரண்டு அமைச்சும் ஒன்றாக இருக்க வேண்டும். நான் கடந்த காலத்தில் அமைச்சராக இருக்கும்போது இந்த விடயங்கள் ஒரு அமைச்சுக்கு கீழே இருந்துவந்தது. அப்போது இதனை இலகுவாக முகாமைத்துவம் செய்துகொள்ள முடியும்.

நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பெரல் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு செய்யலாம். எமக்கு தேவையான எரிபொருளை எமது நாட்டுக்குள்ளே சுத்திகரிப்பு செய்ய முடியுமாக இருந்தபோதும் 2018 க்கு பின்னர் எமது சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படும் எண்ணெய்யைவிட சுத்திரகரிப்பு செய்யப்பட்ட எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகின்றோம்.

இவ்வாறான எமக்கு முகாமைத்துவம் செய்ய முடியுமான பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்ய நாங்கள் முறையான நடவடிக்கை எடுக்க தவறியமையே தற்போது நாங்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைக்கு காரணமாகும். இந்த விடயத்தில் அரசாங்கம் தவறி இருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment