யாழ். தீவக இந்திய மின் திட்டம் இலங்கைக்கு சாதகமானது : மின் தடை என்பது புதிய விடயமல்ல : பொதுமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் - அமைச்சர் பவித்ரா - News View

About Us

About Us

Breaking

Thursday, March 31, 2022

யாழ். தீவக இந்திய மின் திட்டம் இலங்கைக்கு சாதகமானது : மின் தடை என்பது புதிய விடயமல்ல : பொதுமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் - அமைச்சர் பவித்ரா

(இராஜதுரை ஹஷான்)

யாழ்ப்பாணத்தில் உள்ள தீவுகளில் மின்சக்தி திட்டங்களை முன்னெடுக்க இந்தியா 11 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க தீர்மானித்துள்ளமை இலங்கைக்கு சாதகமானதொன்றாகும். தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் புதுப்பிக்கத்தக்க சக்தி வள பயன்பாடு விரிவுப்படுத்தப்பட வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் பவித்ரா வண்ணியாராச்சி தெரிவித்தார்.

நாடு தழுவிய ரீதியிலான மின் விநியோக தடை அமுலில் எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை அத்தியாவசிய சேவைகள், நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியான நிலைமையை பொதுமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இயலுமான அளவு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது நாட்டு மக்களின் பொறுப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் வியாழக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் மின் விநியோக தடை அமுல்படுத்தல் என்பது புதியதொரு விடயமல்ல, கடந்த காலங்களிலும் மின் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் நாளாந்தம் 4 மணித்தியாலங்கள் மின் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டது.

2020 மற்றும் 2021ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொவிட் பெருந்தொற்று பரவல் காரணத்தினால் நாடு தழுவிய ரீதியில் மாதக் கணக்கில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

அரச நிறுவனங்கள் மற்றும் பொது நிலையங்களில் மின்சார பாவனை குறைவடைந்ததால் மின்பாவனைக்கான கேள்வி அதிகளவில் தோற்றம் பெறவில்லை. 2022ஆம் ஆண்டு நிலைமை முழுமையாக மாற்றமடைந்துள்ளது.

பொதுமக்களின் அன்றாட தேவைகள் நாளுக்குநாள் அதிகரித்துள்ளதால் மின் பாவனைக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது. மின் பாவனைக்கான கேள்வியை ஈடுசெய்யும் அளவிற்கு மின்னுற்பத்தி உயர்வடையவில்லை.

2014ஆம் ஆண்டுக்கு பிறகு மின்னுற்பத்தி நிலையங்கள் புதிதாக உருவாக்கப்படாத காரணத்தினால் தேசிய மின் விநியோக கட்டமைப்பில் சமநிலை தன்மையை பேண முடியாத நிலைமை காணப்படுகிறது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மின்னுற்பத்தி நிலையங்களின் நடவடிக்கை வரட்சியான காலநிலை தொடர்வதால் பாதிப்பு தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.

வரட்சியான காலநிலை தொடர்வதால் தற்போது 20 சதவீத அளவில் நீர்மின்னுற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

2021ஆம் ஆண்டு 51 சதவீதமாக காணப்பட்ட நீர் மின்னுற்பத்தி தற்போது 20 சதவீதமாக குறைவடைந்துள்ளமை துரதிஷ்டவமானதாக கருத வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரபுக்கள் உள்ள பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படுவதில்லை என சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.

வைத்தியசாலை, சுகாதார சேவைகள், முப்படைகள் உள்ளிட்ட 165 அத்தியாவசிய சேவைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்கும் பகுதிகளை தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் சுழற்சி முறையில் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படுகிறது.

மின்னுற்பத்தி கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் புதுப்பிக்கத்தக்க சக்தி வள பயன்பாட்டை விரிவுப்படுத்த வேண்டும். மின்னுற்பத்தி நிலையங்களையும் தேவைக்கேற்ப ஸ்தாபிக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தீவுகளில் மின்சக்தி திட்டங்களை முன்னெடுக்க இந்தியா 11 மில்லியன் அமெரிக்க நிதியுதவியை வழங்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை இலங்கைக்கு சாதகமானதாக அமையும்.

யாழ். தீவுகளில் மின்சக்தி திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ள நிலைமையில் இந்தியா நட்புறவின் அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.

தற்போதைய நெருக்கடியான நிலைமையினை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மின்சாரத்தை இயலுமான அளவு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment