மத்திய மலைநாட்டில் கடந்த சில வாரங்களாக கடும் வரட்சி நிலவுவதால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக நீர் ஏந்தும் பகுதிகளான மவுசாகல, விமலசுரேந்திர, கென்யோன், லகஸ்சபான, பொல்பிட்டிய, காசல்ரீ, மேல்கொத்மலை ஆகிய நீர்த் தேக்கங்களுக்கு நீரை வழங்கும் சகல ஆறுகளும் வரண்ட நிலையில் உள்ளன. இதனால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
மவுசாகல நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 32.6 அடி குறைந்துள்ளது. காசல்ரீ நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 50 சதவீதம் குறைந்துள்ளது. இதேபோல் ஏனைய நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக நீர் மின் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மலையக பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது.
ஒரு சில தோட்டங்களில் தற்போது சுத்தமான குடிநீர் பெற பல மைல் தூரம் வரை சென்று ஊற்று நீரை பெற்று வரும் அவல நிலை தோன்றியுள்ளது.
தொடந்தும் வரட்சி நிலவும் பட்சத்தில் மின் உற்பத்தி பெரிதும் பாதிக்கபடலாம் என நீர் மின் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் குறைந்து வருவதால் நீரில் மூழ்கியிருந்த சண்முகநாத சுவாமி கோயில், புத்த பெருமானின் சிலை, இஸ்லாமிய மசூதி, கங்குவத்தை நகரில் உள்ள விநாயகர் கோயில், சாமிமலை கருங்கல் பாலம் என்பன தற்போது வெளியில் காணக்கூடியதாக உள்ளன.
(மஸ்கெலியா விசேட நிருபர்)
No comments:
Post a Comment