ஐ.நாவில் இலங்கைக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு : எமக்கெதிராக சதித்திட்டம் தீட்டுவதாக புதியதொரு நாடகத்தை அரங்கேற்றக் கூடும் - அநுரகுமார திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Thursday, March 3, 2022

ஐ.நாவில் இலங்கைக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு : எமக்கெதிராக சதித்திட்டம் தீட்டுவதாக புதியதொரு நாடகத்தை அரங்கேற்றக் கூடும் - அநுரகுமார திஸாநாயக்க

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு எதிராக தீர்மானம் முன்வைக்கப்பட்டாலோ அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு பதிலாக, பாதிக்கப்பட்டவர்கள் சிறைக்கு அழைக்கப்பட்டமையினாலேயே இவ்விடயம் தொடர்பில் சர்வதேசத்தை நாடுவதற்கு பேராயர் நிர்பந்திக்கப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜெனீவாவிற்கு இவ்வாறான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் அரசாங்கம், மறுபுறத்தில் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாகக் கூறும். பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த போலி நாடகங்களுக்கு மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்றும் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் வியாழக்கிழமை (3) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜெனீவாவில் மேற்குலக நாடுகள் இலங்கையை சுற்றி வளைத்து எமக்கெதிராக சதித்திட்டம் தீட்டுவதாக அரசாங்கம் புதியதொரு நாடகத்தை அரங்கேற்றக் கூடும்.

இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கே இவ்வாறு சர்வதேச சூழ்ச்சிகள் இடம்பெறுவதாகவும், அந்த சூழ்ச்சிகளுக்காக பேராயரை மேற்குல நாடுகள் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அரசாங்கம் புதிய கதைகளை உருவாக்கும்.

நீண்ட காலமாக மார்ச் மாதம் ஜெனீவா கூட்டத் தொடர் ஆரம்பமாகும் போது அரசாங்கம் இவ்வாறான நாடகங்களையே அரங்கேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களே இந்த அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பிரதான காரணியாக அமைந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய இரு தரப்பினர் உள்ளனர்.

தாக்குதல்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்திருந்தும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காதோர் மற்றும் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் ஆகிய இரு தரப்பினரே இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களாவர்.

எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதியுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 3 வருடஙக்ள் நிறைவடையவுள்ள நிலையில், இந்த இரு தரப்பினரில் எவரும் இனங்காணப்படவில்லை.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட போதிலும், சாட்சி விசாரணைகள் எவையும் இன்றி அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பு பேராயருக்கு காணப்படுகிறது. எனினும் அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களையே சிறைக்கு அழைத்தது.

அருட்தந்தைகள் சிலர் குற்ற விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்டனர். இது தொடர்பில் குரல் எழுப்பிய செஹான் மாலக போன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

எனவே அவர்களது துன்பத்தை போக்குவதற்கான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்பதால், பேராயர் வத்திக்கான் மற்றும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு சென்று தமக்கான நியாயத்தை கோர நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.

இங்கு தவறு யாருடையது? இவ்வாறான நிலைமை உருவாகக் காரணமாக இருந்த ஆட்சியாளர்களே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். எனவே ஜெனீவாவில் ஏதேனுமொரு வகையில் ஏற்படும் அச்சுறுத்தலுக்கும், இலங்கைக்கு எதிராக தீர்மானம் முன்வைக்கப்படுமாயின் அதற்கு இந்த அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்.

ஜெனீவாவிற்கு இவ்வாறான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் அரசாங்கம், மறுபுறத்தில் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாகக் கூறும். இந்த போலி நாடகங்கள் பல தசாப்தங்களாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் இவற்றில் ஏமாந்து விடக் கூடாது என்றார்.

No comments:

Post a Comment