(எம்.மனோசித்ரா)
நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியின் ஆழத்தினையும், அதனால் ஏற்படக்கூடிய அபாயத்தினையும் அரசாங்கம் உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். அத்தோடு பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான தேசிய பொருளாதார முகாமைத்துவ தீர்வு திட்டத்தையும் அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) வலியுறுத்தியுள்ளது.
நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரின் தவறான தீர்மானங்களால் கடந்த 8 மாதங்களில் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் ஊடாகக் கிடைக்கப் பெறும் சுமார் 2.5 பில்லியன் டொலர் இழக்கப்பட்டுள்ளது. எரிவாயு மற்றும் நிலக்கரி இறக்குமதிக்காக ரஷ்யாவிடம் 300 மில்லியன் டொலர் கோரப்பட்டுள்ளதாகவும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது.
ஜே.வி.பி. தலைமையகத்தில் வியாழக்கிழமை 3 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021 இன் முதல் 5 மாதங்களில் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் ஊடான அந்நிய செலாவணி இருப்பு வளர்ச்சி போக்கினையே காண்பித்தது. அதற்கமைய 2020 ஜனவரியில் 581 மில்லியன் டொலரிலிருந்து 2021 இல் 775 ஆக அதிகரித்தது.
இதே போன்று பெப்ரவரியில் 527 மில்லியன் டொலரிலிருந்து 580 மில்லியன் டொலராகவும், மார்ச்சில் 492 மில்லியன் டொலரிலிருந்து 612 மில்லியன் டொலராகவும், ஏப்ரலில் 375 மில்லியன் டொலரிலிருந்து 519 மில்லியன் டொலராகவும் , மே மாதத்தில் 432 மில்லியன் டொலரிலிருந்து 460 டொலராகவும் அதிகரித்தது. அதற்கமைய 2020 ஆம் ஆண்டை விட 2021 இல் முதல் 5 மாதங்களில் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் ஊடான வருமானம் 439 டொலர்களால் அதிகரித்திருந்தது.
இவ்வாறு அந்நிய செலாவணி வருமானம் 16 சதவீதமாக வீழ்ச்சியடைந்த போதே நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினோம். எனினும் அரசாங்கம் அது தொடர்பில் எவ்வித அவதானமும் செலுத்தவில்லை.
இதன் காரணமாக கடந்த ஆண்டு ஜூலையில் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் ஊடான டொலர் வருமானம் 35 வீதமாகவும், செப்டெம்பரில் 49 வீதமாகவும், ஒக்டோபரில் 50 சதவீதமாகவும், டிசம்பரில் 60 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதே போன்று இவ்வாண்டு ஜனவரியில் 62 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரை 2055 மில்லியன் டொலர் வருமானம் இழக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில் 2494 மில்லியன் டொலர் அல்லது 2.5 பில்லின் டொலர் வருமானம் இழக்கப்பட்டுள்ளது. ஆனால் எரிபொருள் இறக்குமதிக்கு மாதமொன்று 400 மில்லியன் டொலர் மாத்திரமே தேவைப்படுகிறது.
ஏனைய அனைத்து நாடுகளிலும் கொவிட் தொற்றுக்கு மத்தியிலும் அந்நிய செலாவணி வருமானம் அதிகரித்துள்ள நிலையில் , இலங்கையில் மாத்திரம் வீழ்ச்சியடைக் காரணம் நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுனரின் அறிவற்ற தீர்மானங்களே ஆகும்.
இவ்வாறான பாரிய டொலர் நெருக்கடிக்கு மத்தியில் ஒரு கிராம் உரத்தைக் கூட பெற்றுக் கொள்ளாமல் சீன நிறுவனத்திற்கு 9 மில்லியன் டொலரை வழங்கியுள்ளனர். இராஜாங்க அமைச்சர் சஷீந்தி ராஜபக்ஷ, அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.
தற்போது மியன்மாரிலிருந்து 30 மில்லியன் டொலர்களை மேலதிகமாக செலுத்தி 3 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது. இவ்வாறான நிதி நெருக்கடிகள் நிலவுகின்ற காணப்படுகின்ற போதிலும் நிதி அமைச்சர் எங்கிருக்கிறார் என்றும் தெரியாமலுள்ளது.
வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பது தமது குடும்ப பொருளாதாரம் அல்ல, நாட்டின் பொருளாதாரம் என்பதை ராஜபக்ஷாக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கம் திட்டமிடல் யாதெனில் பால்மா இறக்குமதிக்காக அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் டொலரையும், எரிவாயு நிலக்கரி இறக்குமதிக்காக ரஷ்யாவிடம் 300 மில்லியன் டொலரையும், அரிசி இறக்குமதிக்காக பங்களாதேஷிடம் 250 மில்லியன் டொலரையும், சீமெந்து மற்றும் இரும்பு இறக்குமதிக்காக பாக்கிஸ்தானிடம் 200 மில்லியன் டொலரையும், சீனி, வெங்காயம் மற்றும் எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலரையும், ஆடை உள்ளிட்ட ஏனைய பொருட்களை இறக்குமதி செய்தவற்காக சீனாவிடமிருந்து 1000 மில்லியன் டொலரையும் கடனாகப் பெற்றுக் கொள்வதாகும்.
பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்வதற்காக தேசிய பொருளாதார முகாமைத்துவ திட்டத்தை அரசாங்கம் உடனடியாக முன்வைக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment