(எம்.மனோசித்ரா)
நாட்டில் எதிர்வரும் தினங்களில் எரிபொருள் விநியோகம் வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என்று வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ள போதிலும், நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் மக்களும், வாகனங்களும் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பகல் வேளைகளில் மாத்திரமின்றி இரவிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
எரிபொருள் விநியோகிக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் நீர்கொழும்பில் மீனவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எரிபொருள் விநியோகத்தின் போது தமக்கு முன்னுரிமையளிக்குமாறு வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறான நிலையில் நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் சமையல் எரிவாயுவிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் பாதிப்பு
அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம் காலை முதல் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இரவு வரை வரிசையில் காத்திருந்த போதிலும், அவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் 'இதுவா சுபீட்சத்தின் நோக்கு?' என்று விசனம் வெளியிட்டனர். 'வாக்களித்த எமக்கே இவ்வாறான நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர்' என்றும் மக்கள் தெரிவித்தனர்.
அத்தோடு அம்பாந்தோட்டை - லொனம பிரதேசத்திலுள்ள வயல் நிலையத்தில் அறுவடை செய்து கொண்டிருந்த இயந்திரம் டீசல் இன்மையால் இடைநடுவில் செயழிந்தது. இதனால் டீசல் விநியோகத்தின் போது விவசாயிகளுக்கும் முன்னுரிமையளிக்குமாறு அப்பிரதேசத்திலுள்ள விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீர்கொழும்பில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நீர்கொழும்பில் மீனவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படாமையின் காரணமாக நேற்றையதினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவ் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் தெல்வத்தை சந்தியூடான போக்குவரத்து முற்றாக முடங்கியமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் வாகனத்தை வணங்கிய மக்கள்
நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு ஜாஎல பகுதியில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக பெருமளவான வாகனங்கள் இரவு 11 மணி வரை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் காத்திருந்தன. நீண்ட காத்திருப்பின் பின்னர் எரிபொருளுடன் கனரக வாகனம் வருகை தந்தமையை அவதானித்த மக்கள் வெற்றி கோஷமிட்டு, வாகனத்தை வணங்கி வரவேற்றனர்.
மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு
பெற்றோல் டீசல் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயுவிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எரிவாயு கப்பல்கள் 3 நாட்டை அண்மித்துள்ள போதிலும், கடன் கடிதங்கள் விடுவிக்கப்படாமையால் எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஹோட்டல்கள் உள்ளிட்ட அத்தியாவசிய இடங்களுக்கு மாத்திரமே சமையல் எரிவாயு விநியோக்கப்படுவதாகவும், ஏனைய விநியோகங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில தினங்களில் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி எதிர்வரும் ஓரிரு தினங்களில் நிவர்த்தி செய்யப்படும் என்று வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் புதன்கிழமை 37,300 மெட்ரிக் தொன் எரிபொருள் கப்பலுக்குரிய டொலர் செலுத்தப்பட்டுள்ளமையால், கப்பலிலிருந்து டீசல் தொகை தரையிறக்கப்பட்டதன் பின்னர் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்று வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதனால் அநாவசியமாக தேவைக்கு அதிகமாக எரிபொருளை சேகரிக்க வேண்டாம் என்றும் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை (இன்றும்) நேற்றைய தினமும் 37,300 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பலோன்று இலங்கைக்கு வரவுள்ளதாகவும், அதில் 28,300 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் காணப்படுவதாகவும் வலு சக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment