நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண பொருளாதார அமைச்சரவையை ஜனாதிபதி விரைவாக நியமிக்க வேண்டும் - சட்டத்தரணி மைத்திரி குணரத்ன - News View

About Us

About Us

Breaking

Thursday, March 31, 2022

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண பொருளாதார அமைச்சரவையை ஜனாதிபதி விரைவாக நியமிக்க வேண்டும் - சட்டத்தரணி மைத்திரி குணரத்ன

(எம்.ஆர்.எம்.வசீம்)

யுத்த காலத்தில் யுத்த நிலைமையான அமைச்சரவை அமைப்பதுபோல் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண பொருளாதார அமைச்சரவை ஒன்றை ஜனாதிபதி விரைவாக நியமிக்க வேண்டும். இந்த அமைச்சரவைக்கு பொருளாதாரம் தொடர்பாக அறிவும் அனுபவமும் உள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் ஆளுநர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாங்கள் கேள்விப்படாத, அனுபவிக்காத பாரிய பொருளாதார நெருக்கடியே தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது. என்றாலும் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. பிரச்சினைக்கு தீர்வுகாண நிதி அமைச்சருக்கும் தீர்வில்லை. மத்திய வங்கி ஆளுநரிடமும் தீர்வில்லை. நாட்டின் தற்போதைய பெருளாதார நிலைமையை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத நிலைமையே ஏற்பட்டிருக்கின்றது.

பொதுவாக முழு நாடும் யுத்த நிலைமையில் இருக்கும்போது நாங்கள் யுத்த அமைச்சரவை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வோம். அதன் மூலம் யுத்தத்துக்கு தேவையான செலவினங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இன்று நாட்டில் ஏற்பட்டிருப்பது யுத்த நிலைமை அல்ல.

பொருளாதார ரீதியில் ஒட்டு மொத்த நாடும் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. பொருளாதார முகாமைத்துவத்தில் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் நாட்டை முன்னுக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் ஜனாதிபதி பொருளாதார அமைச்சரவை ஒன்றை விரைவாக ஏற்படுத்த வேண்டும்.

அத்துடன் இந்த பொருளாதார அமைச்சரவைக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொருளாதாரம் தொடர்பாக அறிவும் அனுபவமும் உள்ள நாட்டுக்காக அப்பணித்த அனைவரையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த அமைச்சரவைக்கு ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தில் இருக்கும் பொருளாதார நிபுணர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இந்த அமைச்சரவை 30 பேர் கொண்டதாக இருக்க வேண்டும் என்றில்லை. 15 பேர் இருந்தாலும் போதுமானது.

பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே இந்த அமைச்சரவை நியமிக்கப்படுகின்றது. இதில் நாட்டில் முக்கிய அமைச்சுக்களான மின்சாரம், பெற்றோலியம், நீர்ப்பாசனம், விவசாயம் போன்ற அமைச்சுக்களுக்கு அனுபவம் உள்ள அமைச்சர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் இருளில் இருக்கும் நாட்டுக்கு ஓரளவேனும் வெளிச்சத்தை கொண்டுவரலாம்.

எனவே ஜனாதிபதி அமைச்சரவையில் இருப்பது, தனது சகோதரர், நண்பர் என பார்க்காமல் அனைவரையும் நீக்கிவிட்டு இந்த பொருளாதார அமைச்சரவையை அடுத்த வாரத்துக்குள் நியமிக்க வேண்டும் அதன் மூலமே நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண வழி அமைக்கலாம் என்றார்.

No comments:

Post a Comment