மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் பாரிய பூகம்பமாக மாறும் அபாயம் : நெருக்கடிக்கு டொலர் மாத்திரமல்ல, அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்களே பிரதான காரணம் - முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 31, 2022

மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் பாரிய பூகம்பமாக மாறும் அபாயம் : நெருக்கடிக்கு டொலர் மாத்திரமல்ல, அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்களே பிரதான காரணம் - முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன்

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு போராட்டங்கள் பாரிய பூகம்பமாக மாறும் அபாயம் இருக்கின்றது. அவ்வாறான நிலை ஏற்பட்டால் அரசாங்கத்துக்கு கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். அதனால் அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள், காஸ் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் மிகவும் விரக்தியுடனே காலத்தை கடத்தி வருகின்றனர்.

நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் நீண்ட விரிசையில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. மக்களுக்கு தேவையான தொகையில் 10 வீதத்தைக்கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அந்த நிலை ஏற்படும் என நாங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தெரிவித்து வருகின்றோம். இந்த நெருக்கடி நிலைமைக்கு டொலர் பிரச்சினை மாத்திரம் காரணமல்ல. அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்களே பிரதான காரணமாகும்.

டொலர் இல்லாமல் இதுவரைக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் ஆயிரத்தி 300 கொள்களன்கள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

இதனை இறக்குமதி செய்த வியாபாரிகள் இதற்காக தாமதத்துக்கான நஷ்டஈடு செலுத்தி வருகின்றனர். அதனால் வியாபாரிகள் தங்களுக்கு ஏற்படும் நட்டத்தை பொருட்களுக்கு விலையை அதிகரித்து மீட்டிக் கொள்கின்றனர்.

அத்துடன் அரசாங்கம் உரம் தொடர்பில் எடுத்த பிழையான தீர்மானம் காரணமாக விவசாயம் வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயத்துக்கு தேவையான உரத்தை பெற்றுக் கொள்ள வருடத்துக்கு டொலர் மில்லியனே தேவைப்படுகின்றது. ஆனால் அரசாங்கம் சீனாவில் இருந்து கழிவு உரத்தை கொண்டுவர தீர்மானித்துள்ளதால் ஒட்டு மொத்த விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று மின்சார பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும். இன்றைய தினத்துக்குள் டீசல் கிடைக்கா விட்டால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் 10 மணி நேர மின் துண்டிப்பு மேலும் பல மணி நேர்ததுக்கு அதிகரிக்கலாம் என மின்சார சபை அறிவித்துள்ளது.

எனவே நாடு எதிர்கொண்டுள்ள இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணுமாறு இன்று மக்கள் சுயமாக பல பிரதேசங்களிலும் வீதிக்கிறங்கி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டம் மிக விரைவில் பாரிய பூகம்பமாக வெடிக்கும் அபாயம் இருக்கின்றது.

அதனால் தற்போதைய நிலைமையில் எதிர்க்கட்சிகள் அரசியல் லாபம் தேடாமல், பிரச்சினைக்கு தீர்வுகாண அனைத்து தரப்பினரும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment