பாதாளத்தில் வீழ்ந்த நாட்டை மீட்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் : 20 ஐ இரத்து செய்வதன் மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் - கரு ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Thursday, March 31, 2022

பாதாளத்தில் வீழ்ந்த நாட்டை மீட்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் : 20 ஐ இரத்து செய்வதன் மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் - கரு ஜயசூரிய

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு பொருளாதார மற்றும் சமூக ரீதியாக விழுந்துள்ள பாதாளத்திலிருந்து மீண்டு நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு நாட்டிலுள்ள அனைத்து முன்னணி அரசியல் சக்திகளும் பொது இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும் என சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது, இன்று அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது நாட்டை பின்னடையச் செய்துள்ளனர் அதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அதற்கு இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல் சக்திகளும் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனித்தனியாக அரசியல் செய்வது எமக்கு பிரச்சினை அல்ல.

ஆனால் நாடு விழுந்துள்ள இந்த படுகுழியிலிருந்து நாட்டை மீள கட்டியெழுப்ப வேண்டுமானால் அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஒருமித்த பொது உடன்பாட்டுடன் செயற்பட வேண்டும்.

இன்று நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி தீர்க்க முடியாத பிரச்சினையல்ல. ஒரு கட்டத்தில் இந்தியாவும் இதே போன்ற நெருக்கடியை சந்தித்தது ஆனால், இந்தியா அதை மிகத் துல்லியமான கூட்டு முயற்ச்சியினால் தீர்த்து வைத்தது.

நாம் அனைவரும் அத்தகைய அணுகுமுறையை எடுக்க வேண்டும். அதே சமயம் பாராளுமன்றம் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். எனவே, இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல் சக்திகளும் தனி மனித அதிகாரத்தை இல்லாதொழித்து மீண்டும் பாராளுமன்ற மரபுக்கு திரும்ப வேண்டும்.

அதற்கு பொதுவான ஒருமித்த கருத்துடன் தெளிவான வேலைத்திட்டத்தை நோக்கி நகர வேண்டும். எந்த அதிகார நோக்கமும் இல்லாமல், மிகுந்த நேர்மையுடன் அதற்காக நாங்கள் நிற்கிறோம்.

அத்துடன் நாட்டுக்குள் ஏற்பட்டிருக்கும் அரசியல் சமூக, பொருளாதார பிரச்சினைக்கு 20ஆவது திருத்தச் சட்டமும் காரணமாகும் அதனால், துரிதமாக பாராளுமன்றத்திற்கு பூரண அதிகாரம் வழங்க வேண்டும். 20ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்வதன் மூலம் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.

No comments:

Post a Comment