தடுப்பூசி பெறாதவர்களை பொது இடங்களுக்குள் நுழைவதை தடுக்கும் வர்த்தமானி : மனுக்களை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 31, 2022

தடுப்பூசி பெறாதவர்களை பொது இடங்களுக்குள் நுழைவதை தடுக்கும் வர்த்தமானி : மனுக்களை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

(எம்.எப்.எம்.பஸீர்)

முழுமையாக தடுப்பூசி பெறாதவர்களை பொது இடங்களுக்குள் நுழைவதை தடுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் நேற்று (30) உத்தரவிட்டது.

ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாமின் பெரும்பான்மையான நீதியரசர்களின் நிலைப்பாட்டுக்கு அமைய, இவ்வாறு குறித்த மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதியரசர்கள் குழாமுக்கு தலைமை வகித்த நீதியரசர் பிரியந்த ஜயவர்தன அறிவித்தார்.

எஸ்.சி. எப்.ஆர். 72/ 22, எஸ்.சி. எப்.ஆர். 73/22, எஸ்.சி. எப்.ஆர். 77/22, எஸ்.சி. எப்.ஆர். 83/22 ஆகிய வழக்கிலக்கங்களின் கீழ், தடுப்பூசி பெறாதவர்களை பொது இடங்களில் நுழைவதை தடுக்கும் வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்தி நான்கு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. நவீந்ர லால் குணரத்ன, வைத்தியர் ரஞ்ஜீவ மொஹான் முனசிங்க, இந்ரானி சுவர்னா, பியாவி விஜேவர்தன, கமிக குணவர்தன மற்றும் திறந்த பல்கலைக் கழகத்தின் சுதேச வைத்திய விஞ்ஞான பிரிவின் விரிவுரையாளரான எப்.எம். ஜயதில உள்ளிட்டோரால் இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே, சன்ன ஜயசுமன, சுகாதர சேவைகள் பணிப்பாளஎ நாயகம் அசேல குணவர்தன, பொலிஸ்மா அதிபர், சுகாதார சேவைகள் ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் எம்.டி.ஜே. அபயகுணவர்தன, பண்டாரநாயக்க ஞாபகார்த்த ஆயுர்வேத பரிசோதனை நிறுவனத்தின் பதில் தலைவர் , சட்ட மா அதிபர் உள்ளிட்ட 13 பேர் இம்மனுக்களில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

இம்மனுக்களை ஆராய, பிரதம நீதியரசரால் ஐவர் கொண்ட பூரண நீதியரசர்கள் அமர்வொன்று நியமிக்கப்பட்டது. அதன்படி நீதியரசர் பிரியந்த ஜயவர்தன தலைமையிலான ப்ரீத்தி பத்மன் சுரசேன, காமினி அமரசேகர, குமுதினி விக்ரமசிங்க, ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்களை உள்ளடக்கிய குழாம் மனுக்களை ஆராய்ந்தது.

சட்டத்தரணி சஞ்ஜீவ களுஆரச்சியின் ஆலோசனைக்கு அமைய இம்மனுக்கள் தொடர்பில் மனுதாரர்களுக்காக சட்டத்தரணிகளான ஹபீல் பாரிஸ், சாந்த ஜயவர்தன, அமில பெரேரா ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆஜரானார்.

1897 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தொற்று நோய் காரணமாக தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் (1954 ஆம் ஆண்டு திருத்தம்) கீழ் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி கட்டளைகள்

அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாகவும், அதற்கமைய, ஏப்ரல் 30 முதல் முழுமையாக தடுப்பூசி பெறாதவர்களை பொது இடங்களுக்கு நுழைவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அதனூடாக முழுமையான தடுப்பூசி ஏற்றாதவர்கள் பாதையில் செல்வது, பொது போக்குவரத்தை பயன்படுத்துவது போன்றவையும் தடுக்கப்படுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்ர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் சட்ட ரீதியாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை தான்றோண்டித் தனமாக பயன்படுத்தி இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாகவும், அதனால் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் கோரியுள்ளார்.

எனினும் கொரோனா தொற்றுக்கு உள்ளானோருக்கு சிகிச்சையளிக்க் சுதேசிய வைத்திய முறைமையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி பெற வேண்டும் என கட்டாயப்படுத்துவது நியாயமற்றது எனவும், இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள உறிமையை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் மனுதரர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் மனுக்களை விசாரணைக்கு ஏற்குமாறும், மனுக்களை விசாரித்து தீர்ப்பலிக்கும் வரையில் சுகாதார அமைச்சரின் குறித்த வர்த்தமானிக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் கோரப்ப்ட்டது.

இந் நிலையில் மனுக்களில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டவர்கள் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.

கொரோனா தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே இதன்போது குறிப்பிட்டார்.

நோய் பரவுவதை தடுக்கும் வகையில் 1897 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தொற்று நோய் காரணமாக தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இவ்வாறான சட்ட திட்டங்களை அமுல் செய்ய சுகாதார அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது எனவும், இந்த வர்த்தமானி உரிய சட்ட வரையறைக்கு உட்பட்டு வெளியிடப்பட்டது எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே வாதிட்டார்.

அரச செலவில் மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை ஊடாகவே கொரோனா நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

இந் நிலையிலேயே இரு தரப்பிலும் முன் வைக்கப்பட்ட வாதங்களைத் தொடர்ந்து, பெரும்பான்மை நீதிபதிகளின் நிலைப்பாட்டுக்கு அமைய, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்வதாக நீதியரசர்கள் குழாமின் தலைமை நீதியரசர் பிரியந்த ஜயவர்தன அறிவித்தார்.

No comments:

Post a Comment