பாராளுமன்றத்தின் ஊடாக அரசாங்கத்தை வீழ்த்தி சிறந்த ஆட்சியை ஸ்தாபிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : பஷில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான அச்சகம் உள்ளதால் அவர் எண்ணம் போல் நாணயம் அச்சிடுவார் - விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Thursday, March 31, 2022

பாராளுமன்றத்தின் ஊடாக அரசாங்கத்தை வீழ்த்தி சிறந்த ஆட்சியை ஸ்தாபிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : பஷில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான அச்சகம் உள்ளதால் அவர் எண்ணம் போல் நாணயம் அச்சிடுவார் - விமல் வீரவன்ச

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தின் ஊடாக அரசாங்கத்தை வீழ்த்தி சிறந்த அரசாங்கத்தை ஸ்தாபிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். உயிரற்ற சடலம் போல் அரசாங்கம் உணர்வற்றதாக உள்ளது. 'மூடர்களே வெளியேறுங்கள்' என நாட்டு மக்கள் அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டும். நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு அச்சம் இருப்பதால் அவர் எண்ணம் போல் நாணயம் அச்சிடுவார் என முன்னாள் கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கோட்டை ஸ்ரீ கல்யாணி தர்ம சங்க சபையின் மகாநாயக்கர் இத்தபானே தர்மலங்கார தேரரை சந்தித்து அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியதன் பின்னர் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது.அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தாமல் உயிரற்ற சடலத்தை போன்று உணர்வில்லாமல் இருக்கிறது.

பாராளுமன்றின் ஊடாக அரசாங்கத்தை வீழ்த்தி சிறந்த அரசாங்கத்தை ஸ்தாபிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றினைய வேண்டும். நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையினை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பலம் வாய்ந்த நாடுகள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உரிய திட்டங்களை செயற்படுத்தியுள்ளன என்பதை அரசாங்கத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் நன்கு அறிவார்கள்.

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. கடந்த அரசாங்கம் ஏற்படுத்திய நெருக்கடிதான் பொறுப்புக் கூற வேண்டிய தேவையில்லை என அரச தலைவர் குறிப்பிட முடியாது. பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதற்காக மக்கள் அரச தலைவர்களை தெரிவு செய்யவில்லை.

அரசாங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கை முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டு விட்டது. மூடர்களே வெளியேறுங்கள் என நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றினைந்து போராட வேண்டும். மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அதிகாரம் அரசியல்வாதிகளுக்கும்,ஆள்பவர்களுக்கும் கிடையாது.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான அச்சகம் உள்ளதால் அவர் எண்ணம் போல் நாணயம் அச்சிடுவார். பண வீக்கம் தீவிரமடைவதால் ஏற்படும் பாதிப்பு அவருக்கு தாக்கம் செலுத்தாது. நாட்டு மக்கள் நடப்பு நிலவலரங்கள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment