(எம்.மனோசித்ரா)
சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு எதிர்வரும் ஓரிரு நாட்களில் 5 - 10 மில்லியன் டொலர்களை வழங்காவிட்டால் அடுத்த வாரம் முதல் நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும். இந்த நிலைமை தொடர்பில் ஏற்கனவே நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்டோர் அறிவித்துள்ளதாக லாப் நிறுவன தலைவர் டபிள்யு.கே.வேகப்பிட்டிய தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சமையல் எரிவாயு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் தெளிவுபடுத்தும் போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், லாப் நிறுவனம் மாதமொன்றுக்கு சுமார் 15000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவினை சந்தைகளுக்கு விநியோகித்துக் கொண்டிருந்தது, எனினும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியின் காரணமாக சமையல் எரிவாயுவினைப் பெற்றுக் கொள்வதிலும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதற்கான கடன் கடிதங்களை வணிக வங்கிகளிடமிருந்து விநியோகித்துக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.
தற்போதைய நிலைமையில் அடுத்த வாரமளவில் மீண்டும் பாரியதொரு சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக் கூடிய நிலைமை காணப்படுகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகத்திலுள்ள எரிவாயு முனையத்தை உபயோகித்து தெற்காசியாவிலுள்ள பங்களாதேஷ், மாலைதீவு, ஆபிரிகா உள்ளிட்ட நாடுகளுக்கு எரிவாயுவை மீள் ஏற்றுமதி செய்து அதன் ஊடாக அந்நிய செலாவணி ஈட்டப்பட்டது. தற்போது அந்த செயற்பாடுகளுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
மீள் ஏற்றுமதி செய்வதற்கு தேவையான எரிவாயுவினை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்களுக்கும் எமக்கு கிடைக்கவில்லை. இது தொடர்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாம் நிதி அமைச்சரை சந்தித்து எமக்கு தேவையான கடன் சான்று பத்திரங்களை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.
சமையல் எரிவாயு என்பது தற்போது மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரதான இடத்தை பிடித்துள்ள ஒன்றாகும். எனவே நாம் தொடர்ந்தும் அரசாங்கத்திடமும் உரிய நிறுவனங்களிடமும் இவ்வாறான பிரச்சினை ஏற்படும் என்பதை தெரிவித்திருந்தோம்.
அதற்கமைய தற்போது எரிவாயுவை விநியோகிப்பதில் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். எமக்கு எரிவாயுவை இறக்குமதி செயவதற்கு சாதாரண சூழலில் மாதாந்தம் 15 - 20 மில்லியன் டொலர் வரை தேவைப்படும்.
ஆனால் தற்போது ரஷ்ய - உக்ரைன் மோதலால் உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை வரலாற்றில் முதன் முறையாக 111 டொலராக உயர்வடைந்துள்ளது. அத்தோடு கப்பல்களுக்கான கட்டணங்களும் அதிகரித்துள்ளன இதனால் இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் அளவும் குறைவடைந்துள்ளது.
நாம் இதற்கு முன்னர் நாளாந்தம் சுமார் 40000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைகளுக்கு விநியோகித்தோம், ஆனால் தற்போது 2000 சிலிண்டர்களைக் கூட சந்தைகளுக்கு விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே இறக்குமதிக்கு தேவையான டொலர் வழங்கப்படாவிட்டால் அடுத்த வாரம் முதல் சமையல் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும். இந்த நிலைமை தொடர்பில் நிதி அமைச்சருக்கு நேரடியாகவும், மத்திய வங்கி ஆளுனருக்கு எழுத்து மூலமும் அறிவித்துள்ளோம்.
அத்தோடு வர்த்தக அமைச்சர் மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அமைச்சர் உள்ளிட்ட சகல தரப்பினருக்கும் இது தொடர்பில் தெரிவித்துள்ளோம். எனவே உரிய தரப்பினர் இது தொடர்பில் அவதானம் செலுத்துவர் என்று எதிர்பார்க்கின்றோம். அடுத்த வாரம் 5 - 10 மில்லியன் டொலரை வழங்காவிட்டால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றார்.
No comments:
Post a Comment