(நா.தனுஜா)
பொதுக் கடன்களில் ஏற்பட்டிருக்கும் மிகையான அதிகரிப்பு, வெளிநாட்டுக் கையிருப்பு வீழ்ச்சி, எதிர்வரும் ஆண்டுகளுக்கான பாரிய நிதித் தேவை உள்ளடங்கலாக இலங்கையின் பொருளாதாரம் தற்போது பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாணய நிதியம், நுண்பாகப் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் கடன்களின் நிலைபேறானதன்மை ஆகியவற்றை அடைந்து கொள்வதற்கான செயற்திறன்மிக்க பொறிமுறையொன்றை இலங்கை உடனடியாக நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியமானது அதன் ஒப்பந்தத்தின் நான்காம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் அனைத்து அங்கத்துவ நாடுகளுடனும் குறித்த கால இடைவெளியில் இரு தரப்புக் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதுடன் அதன்போது அந்நாடுகளில் பொருளாதார ரீதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பிலும் மதிப்பீடுகளை மேற்கொள்ளும். அக்கலந்துரையாடல்களின் முடிவில் அதிகாரிகளால் தயாரிக்கப்படும் அறிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையிடம் கையளிக்கப்படும்.
அதன்படி சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் குழுவின் இலங்கை குறித்த வருடாந்த மதிப்பீட்டு அறிக்கை கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி அதன் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது குறித்து ஆராய்ந்ததன் பின்னர் இலங்கையின் பொருளாதார நிலைவரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் ஏற்பட்ட நெருக்கடி நிலைக்கு மத்தியில், நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு மட்டமும் பொதுக் கடன்களின் நிலைபேறான தன்மையும் மிக மோசமான நிலையை அடைந்திருப்பதுடன் கடந்த 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களும் 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பெருமளவான வரிச் சலுகைகள் உள்ளடங்கலாக கொள்கை ரீதியில் ஏற்படுத்தப்பட்ட பாரிய மாற்றங்களும் இந்த நிலையேற்படுவதற்கு பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளன.
கடந்த 2020 ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் நாடு முடக்கப்பட்டமை ஆகியவற்றின் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. தொற்றுப் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையால் சர்வதேச பிணையங்கள் சந்தையை அணுகமுடியாத நிலையேற்பட்டது.
தொற்றுப் பரவலால் ஏற்பட்ட தாக்கங்களிலிருந்து மீள்வதற்காக நுண்பாகப் பொருளாதாரக் கொள்கையில் மாற்றங்கள், சமூகப் பாதுகாப்பிற்கான செலவின அதிகரிப்பு, பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு கடன் மீள் செலுத்துகையில் விலக்களிப்பு உள்ளடங்கலாகப் பரந்த அடிப்படையிலான பல்வேறு நடவடிக்கைகள் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டன. அவற்றுக்கு சிறந்த தடுப்பூசி வழங்கல் செயற்திட்டம் வலுவான பங்களிப்பை வழங்கியது.
கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஓரளவிற்கு மீட்சியைக் காண்பித்ததுடன் தொற்றுப் பரவலின் பின்னரான நடவடிக்கைகள் மற்றும் அவ்வாண்டின் இறுதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவினால் அதிகரித்தமை என்பன அதற்குப் பங்களிப்புச் செய்தன.
தொற்றுப் பரவலுக்கு முன்னரான வரி விலக்களிப்பு, தொற்றுப் பரவலின் போதான வருமான வீழ்ச்சி, தொற்றுப் பரவலை எதிர்கொள்வதற்கான செலவினங்கள் போன்றன கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 10 சதவீதமாக அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்தன.
கடந்த 2019 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 94 சதவீதமாகக் காணப்பட்ட பொதுக் கடன்களின் அளவு கடந்த 2021 ஆம் ஆண்டில் 119 சதவீதமாக அதிகரித்தது.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பெருமளவான வெளிநாட்டு நாணய கடன் மீள் செலுத்துகை மற்றும் நடைமுறைக்கணக்கில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பன பொருளாதாரத்தில் குறித்தளவிலான வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வழிவகுத்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியைப் பதிவு செய்தது.
பண வீக்கமானது இவ்வாண்டு ஜனவரி மாதம் 14 சதவீதம் வரை அதிகரித்ததுடன் எதிர்வரும் காலாண்டுகளிலும் பண வீக்கம் இரு இலக்கங்களிலேயே தொடர்ந்து பதிவாகும். கடந்த 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து கேள்வி மற்றும் நிரம்பல் ஆகிய இரு பக்கங்களிலிருந்தும் பண வீக்கத்தின் மீதான அழுத்தமொன்று தோற்றம் பெற்றிருப்பது இதற்கான காரணமாக அமைந்துள்ளது.
நிதி மற்றும் மீள் செலுத்துகைக்கான நிதித் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்படும் வரையில், இறக்குமதி மற்றும் தனியார் கடன்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்களவிலான சுருக்கத்தையோ அல்லது ஸ்திரமற்ற நாணயநிலையையோ எதிர்கொள்ள வேண்டிய நிலையேற்படலாம்.
தொற்றுப் பரவலினால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை ரீதியான தீர்மானங்கள் மற்றும் வெற்றிகரமான தடுப்பூசி வழங்கல் செயற்திட்டம் ஆகியவற்றைப் பாராட்டும் அதேவேளை, பொருளாதார மீட்சிக்கு மத்தியில் பொதுக் கடன்களில் ஏற்பட்டிருக்கும் மிகையான அதிகரிப்பு, வெளிநாட்டுக் கையிருப்பு வீழ்ச்சி, எதிர்வரும் வருடங்களுக்கான பாரிய நிதித் தேவை உள்ளடங்கலாக இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பல்வேறு சவால்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம்.
இவ்வாறானதொரு பின்னணியில் பொருளாதார ரீதியில் வலுக்குறைந்த தரப்பினரைப் பாதுகாக்கும் அதேவேளை, நுண்பாகப் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் கடன்களின் நிலைபேறான தன்மை ஆகியவற்றை அடைந்து கொள்வதற்கான ஏற்புடைய பொறிமுறை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்துகின்றோம்.
மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எதிரான மிகக் குறைந்தளவிலான வரி வீதம் தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதுடன் வருமானவரி மற்றும் பெறுமதி சேர்வரி என்பவற்றை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவது குறித்தும் சுட்டிக்காட்டுகின்றோம்.
அதேவேளை பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தக் கூடியவாறான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் ஊழியப் படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் வீதத்தைக் குறைக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.
அத்தோடு கொழும்புத் துறைமுக நகர செயற்திட்ட முகாமைத்துவத்தை உரியவாறு கையாள்வதற்கும் அரசநிர்வாகம் மற்றும் ஊழல்மோசடிகளுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment