சீனாவுடன் தொடர்புகளைப் பேணுவதன் மூலம் எமது நாடு பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் - துஷார இந்துனில் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 26, 2022

சீனாவுடன் தொடர்புகளைப் பேணுவதன் மூலம் எமது நாடு பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் - துஷார இந்துனில்

(நா.தனுஜா)

உக்ரேன் அதற்கு மிக அருகிலுள்ள பலம்பொருந்திய நாடான ரஷ்யாவின் நிலைப்பாட்டைக் கருத்திற்கொள்ளாமல், தொலைவிலுள்ள ஏனைய நாடுகளுடன் தொடர்புகளைப் பேணியமையின் விளைவாகத் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலைமையிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் அயல் நாடான இந்தியாவை விடுத்து, தொலைவிலுள்ள சீனாவுடன் தொடர்புகளைப் பேணுவதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் எமது நாடும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கக்கூடும். எனவே வரையறைகளின்றி, இராஜதந்திர ரீதியான நகர்வுகளுக்கு அப்பால் வெளிநாடுகளுடன் தொடர்புகளைப் பேணுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை 25 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது, அண்மையில் அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் கவிதையொன்றைக் கூறினார். அந்தக் கவிதையின்படி, தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாகத் தோன்றிய குழந்தைகள் நாட்டு மக்களைச் சென்றடைந்துள்ளன.

அத்தியாவசியப் பொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் உள்ளிட்ட அனைத்து நெருக்கடிகளையும் மக்களே அனுபவிக்கின்றார்கள் இவையனைத்தினதும் தந்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவா என்று கேட்கின்றோம்.

அடுத்ததாக இன்றளவிலே உக்ரேனும் ரஷ்யாவும் எமக்கு சிறந்த பாடத்தைக் கற்பித்துள்ளது. உக்ரேனுக்கு அருகிலுள்ள பலம் பொருந்திய நாடான ரஷ்யாவின் நிலைப்பாட்டைக் கருத்திற் கொள்ளாமல், தொலைவிலுள்ள ஏனைய தரப்பினருடன் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபடத் தொடங்கியமையினாலேயே இந்த நெருக்கடி உருவாகியுள்ளது.

அதேபோன்று எமது நாடும் அயல் நாடான இந்தியாவை விடுத்து, தொலைவிலுள்ள சீனாவுடன் தொடர்புகளைப் பேணுவதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேறபடலாம்.

குறிப்பாக கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை உள்ளடங்கலாக சீனாவின் ஆதிக்கத்திற்குள் இருக்கக்கூடிய பகுதிகளை தனி வலயங்களாகப் பெயரிடப்போவதாக சீனா கூறும் பட்சத்தில், அயல் நாடுகளிடமிருந்து எமக்கும் இதுபோன்ற எதிர்வினைகள் ஏற்படக்கூடும்.

அதேபோன்று திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் எமது வலயத்திற்குரியவை என்று இந்தியா கூறுமானால், எமது நாடு பாரிய அழுத்தங்களுக்குள்ளாகும். ஆகவே எவ்வித வரையறைகளுமின்றி, இராஜதந்திர ரீதியான நகர்வுகளுக்கு அப்பால் வெளிநாடுகளுடன் தொடர்புகளைப் பேணும் பட்சத்தில் இவ்வாறான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படலாம் என்பதைப் புரிந்துகொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

அடுத்ததாக நாட்டில் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது பற்றிப் பேசப்படுகின்றது. இருப்பினும் கடந்த 2017 ஆம் ஆண்டு விஞ்ஞான பீடத்திற்குத் தெரிவாகி, 2019 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் மேலதிக பயிற்சியையும் நிறைவு செய்து, கடந்த இரு வருடங்களாக பாடசாலைகளுக்கு நியமனம் பெறாமல் பெருமளவானோர் காத்திருக்கின்றார்கள்.

அவர்களுக்குரிய நியமனங்களை வழங்காமல், ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. அதேபோன்று ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு குறித்தும் அரசாங்கம் உரியவாறு அவதானம் செலுத்தவில்லை.

மறுபுறம் எமது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ டோர்ச் லைட் உபகரணத்தைப் பாராளுமன்றத்திற்குள் கொண்டுவந்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு சபாநாயகர் பொலிஸ்மா அதிபருக்குப் பணப்புரை விடுத்திருக்கின்றார். ஆனால் டோர்ச் லைட் என்பது பேனா, பென்சில் போன்று அலுவலகப் பையினுள் அடங்கும் உபகரணங்களில் ஒன்றாகும்.

பாராளுமன்றத்திற்குள் பொலிஸ் அதிகாரிகள் மீது கதிரைகளைத் தூக்கி வீசி, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது மீளகாய்த் தூளை வீசியெறிந்து, சபாநாயகரின் ஆசனத்தின் மீது தண்ணீரை ஊற்றியவர்கள்தான் இப்போது எதிர்க்கட்சியினர் டோர்ச் லைட்டை பாராளுமன்றத்திற்குள் கொண்டுவந்ததாகக் குற்றஞ் சுமத்துகின்றார்கள் என்று சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment