உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய தகவல்கள் கசிவு : ஆராய அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்கசார்பற்ற குழு அவசியம் - ரணில் விக்கிரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Saturday, February 26, 2022

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய தகவல்கள் கசிவு : ஆராய அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்கசார்பற்ற குழு அவசியம் - ரணில் விக்கிரமசிங்க

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் ஊடாக புதிய காரணிகள் பல தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த காரணிகள் தொடர்பில் ஆராய்வதற்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்கசார்பற்ற குழுவொன்று அவசியமாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய காரணிகள் தற்போது வெளிப்பட்டுள்ளன. குறிப்பாக ஆணைக்குழு அறிக்கைக்கு அமைய சிலருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், விசாரணைகளை நிறைவு செய்ததன் பின்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு எதிராகவே அரசாங்கம் வழக்கு தொடர்ந்தது.

எனினும் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக இவர்கள் இருவரதும் சாட்சிகளை விசாரிக்காமலேயே விடுவிக்கப்பட்டனர். இந்த இரு வழக்குகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளன. அதே போன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரொருவரும், மேலும் இருவரும் இது தொடர்பில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இறுதியான குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் வாக்குமூலம் காணப்படுகிறது.

இராணு புலனாய்வுப் பிரிவிற்கு இதனுடன் தொடர்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை 2019 நவம்பர் மாதத்திற்கு முன்னரும் ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார். இந்த அனைத்து காரணிகள் தொடர்பில் ஆராயும் போது விசாரணைகள் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.

ஏன் இவர்கள் கைது செய்யப்பட்டனர்? ஏன் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது? மேற்கூறப்பட்ட காரணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப் போவதில்லையா? இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றிணைந்து பக்கசார்பற்ற விசாரணையொன்றை முன்னெடுக்க வேண்டும்.

தற்போது வெளியாகியுள்ள புதிய காரணிகள் தொடர்பில் தெரியப்படுத்துவதற்கு அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்கசார்பற்ற குழுவொன்று அவசியமாகும் என்றார்.

No comments:

Post a Comment