(எம்.எம்.சில்வெஸ்டர்)
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச எடைதூக்கல் போட்டியில் சத்துரங்க லக்மால் மற்றும் இந்திக்க திசாநாயக்க இருவரும் தங்கப் பதக்கங்களை வென்றெடுத்ததுடன், மனோஜ் மதுவன்த்த, என்டன் சுதேஷ் பீரிஸ் வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 2022 பேர்மிங்ஹாம் பொதுநலவாய விளையாட்டு விழாவில் போட்டியிடுவதற்கான தகுதியை நால்வரும் பெற்றுக் கொண்டனர்.
சர்வதேச எடைத்தூக்கல் போட்டி இம்மாதம் 25 முதல் 27 ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் இரண்டாவது நாளான இன்றையதினம் இலங்கையின் நான்கு வீரர்கள் களமிறங்கி இருந்தனர்.
இந்நிலையில், இன்றையதினம் 2 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றிக் கொண்ட இலங்கை, இதுவரை 3 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் என மொத்தமாக 6 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
ஆண்களுக்கான 67 கிலோ கிராம் எடைக்குட்பட்ட போட்டிப் பிரிவில் பங்கேற்ற இலங்கையின் சத்துரங்க லக்மால் ஸ்னெட்ச் முறையில் 118 கிலோ கிராம் எடை மற்றும் கிளீன் அண்ட் ஜேர்க் முறையில் 150 கிலோ கிராம் எடை என மொத்தமாக 268 கிலோ கிராம் எடையை தூக்கி தங்கப் பதக்கம் வெனறார்.
இதே போட்டிப் பிரிவில் பங்கேற்ற மற்றுமொரு இலங்கையரான மனோஜ் மதுவன்த்த மொத்தமாக 245 கிலோ கிராம் (ஸ்னெட் 110 கிலோ, கிளீன் அண்ட் ஜேர்க் 135 கிலோ) எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இதேவேளை, ஆண்களுக்கான 73 கிலோ கிராம் எடைக்குட்பட்ட போட்டிப் பிரிவில் பங்கேற்ற இந்திக்க திசாநாயக்க மொத்தமாக 278 கிலோ கிராம் எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை சுவிகரித்தார்.
இவர் ஸ்னெட்ச் முறையில் 128 கிலோ கிராம் எடையும், கிளீன் அண்ட் ஜேர்க் முறையில் 150 கிலோ கிராம் எடையும் உயர்த்தியிருந்தார்.
இதே போட்டியில் பங்கேற்றிருந் மற்றொரு இலங்கையரான அன்டன் சுதேஷ் பீரிஸ் மொத்தமாக 260 கிலோ கிராம் (ஸ்னெட்ச் 118 கி.கி. , கிளீன் அண்ட் ஜேர்க் 142 கி.கி.)எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இப்போட்டியில் போட்டியிட்ட ஏனையோர் ஸ்னெட்ச் முறையில் தத்தமது ஆரம்ப எடையை மூன்று முயற்சிகளிலும் தூக்குவதற்கு தவறியதால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
No comments:
Post a Comment