மேற்கு நாடுகளுடன் ராஜரீக உறவு தேவையில்லை : ரஷ்யாவின் வேகம் குறைவு என்கிறது பிரிட்டன் : படைகளை அனுப்பிய செச்னியா : இந்திய பிரதமருடன் பேசிய உக்ரேன் ஜனாதிபதி : என்னை சிறைப்படுத்தும் திட்டம் முறியடிப்பு : அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்குங்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 26, 2022

மேற்கு நாடுகளுடன் ராஜரீக உறவு தேவையில்லை : ரஷ்யாவின் வேகம் குறைவு என்கிறது பிரிட்டன் : படைகளை அனுப்பிய செச்னியா : இந்திய பிரதமருடன் பேசிய உக்ரேன் ஜனாதிபதி : என்னை சிறைப்படுத்தும் திட்டம் முறியடிப்பு : அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்குங்கள்

மேற்கு நாடுகளுடனான ராஜரீக உறவு ரஷ்யாவுக்கு தேவையில்லை என, ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மேட்வேடேவ் தெரிவித்துள்ளார்.

உக்ரேன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை நடத்தி வரும் நிலையில், மேற்கு நாடுகள் பல ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதித்துள்ளன. இதையடுத்து, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு பிரதமர் பதவியிலிருந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினால் நீக்கப்பட்ட டிமிட்ரி, பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவராக பதவி வகித்து வருகிறார். அவர், ரஷ்ய சமூக வலைத்தளமான வி.கே. பக்கத்தில், “தூதரகங்களை மூட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

புட்டினால் வரையறுக்கப்பட்ட இலக்குகளை அடையும் வரை, உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடரும் என, அவர் தெரிவித்தார். புட்டினின் நோக்கங்கள் என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

ஐரோப்பிய கவுன்சிலில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்ய சட்டத்தில் மரண தண்டனையை மீண்டும் கொண்டு வருவதற்கு இதுவொரு வாய்ப்பை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
"ரஷ்யாவின் குற்றச்சாட்டு உண்மையில்லை"
உக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சக் டிம்ட்ரோ குலேபா, ரஷ்ய பிரதேசத்தில் வெடி குண்டை வெடிக்கச் செய்ய தனது அரசு உத்தேசித்துள்ளது என்ற குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கதிரியக்க பொருட்களுடன் வழக்கமான வெடி பொருட்களைச் சேர்க்கும் சாதனங்களோடு, ஆயிரக்கணக்கான மக்களை உடனடியாகக் கொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட வெடி குண்டை ‘டர்டி பாம்ப்’ என்று அழைக்கின்றனர்.

அத்தகைய வெடி குண்டை உக்ரேன் தயாரிப்பதை நாங்கள் விரும்பவில்லை என்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்ய தூதுவர் வசிலி நிபென்ஸியா கூறினார்.

குலேபா செய்த ஒரு ட்வீட்டில் இந்த ஆலோசனையைக் கேலி செய்தார். அப்போது, “ரஷ்ய பிரசாரம் அதன் கட்டுப்பாட்டை இழந்து சென்றுகொண்டிருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.
"ரஷ்ய படைகளின் வேகம் குறைந்துள்ளது" என்கிறது பிரிட்டன்
“கடுமையான தளவாட சிக்கல்கள் மற்றும் வலுவான உக்ரேனிய எதிர்ப்பின் விளைவாக, ரஷ்யர்கள் முன்னேறி வருவதன் வேகம் தற்காலிகமாகக் குறைந்துள்ளது,” என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

“ரஷ்ய படைகள் உக்ரேனிய மக்களிடம் தங்குமிடங்களைக் கடந்து செல்லும்போது, அவர்களைச் சுற்றி வளைத்து தனிமைப்படுத்த படைகளை விட்டுச் செல்கின்றன,” என்று அது குறித்த ட்வீட் தெரிவிக்கிறது.

மேலும், உக்ரேனின் தலைநகரான கிவ்வைக் கைப்பற்றுவது ரஷ்யாவின் முக்கிய நோக்கமாக உள்ளது என்று அது மேலும் கூறுகிறது.
கீவ்வின் ஒரு குடியிருப்பின் மீது ஏவுகணை தாக்குதல்
இன்று காலையில் உக்ரேனின் தலைநகரான கீவ்வில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சிசிடிவி படம் அந்தத் தாக்குதல் நடந்த தருணத்தைக் காட்டுகிறது.

அந்தத் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக உக்ரேன் மாநில அவசர சேவை தெரிவித்துள்ளது.
ரஷ்ய படைக்கு உதவ படைகளை அனுப்பிய செச்னியா
ரஷ்ய படைகளுடன் போரில் ஈடுபட தனது வீரர்களை உக்ரேனுக்கு அனுப்பியுள்ளதாக ரஷ்யாவின் ஒரு பகுதியான செச்னியாவின் தலைவர் கூறியுள்ளார்.

இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், ரம்ஜான் கதீரோஃப், செச்சென் படைகள் இதுவரை உக்ரேனிய ராணுவ வளாகத்தை எந்த உயிரிழப்பும் இன்றி வெற்றிகரமாகக் கைப்பற்றியதாகக் கூறினார்.

தெற்கு ரஷ்ய குடியரசின் தலைவர் ரஷ்ய அதிபரின் முக்கிய கூட்டாளி ஆவார். படையெடுப்பை நியாயப்படுத்தும் அவர், உக்ரேனை தாக்கும் புட்டினின் முடிவு, ரஷ்யாவின் எதிரிகள் அந்த நாட்டைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் என்றார்.

கதிரோஃபுக்கு விசுவாசமான செச்சென் போராளிகள் ஒரு மோசமான நற்பெயரைக் கொண்டுள்ளார். அதோடு, அவர் மீது மனித உரிமை மீறல் சார்ந்த குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளனர்.
வில்லியம் மற்றும் கேட் உக்ரேனுக்கு ஆதரவு
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவி கேட், உக்ரேன் ஜனாதிபதி வொலோதிமிர் ஸெலன்ஸ்கிக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

அவருக்கும் உக்ரேன் மக்களுக்கும் ஆதரவாக தாங்கள் நிற்பதாக பிரிட்டிஷ் அரச தம்பதி தெரிவித்துள்ளனர்.
இந்திய பிரதமருடன் பேசிய உக்ரேன் ஜனாதிபதி
இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் உக்ரேன் ஜனாதிபதி பேசியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு சபையில் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது.

இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது. ஐ.நா. சபையில் இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யா வரவேற்றது. இந்தியாவுடனான சுமுகமான உறவு தொடரும் என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, உக்ரேனில் ரஷ்ய ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்து எடுத்துரைத்து, அரசியல் ஆதரவு கேட்டுள்ளார்.

போரினால் உக்ரேனில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பிற்கு உக்ரேன் ஜனாதிபதியிடம், பிரதமர் மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். மேலும், வன்முறையை விட்டு சுமுகமான பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

உக்ரேனில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர், இந்தியர்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் அனுப்பி வைக்க உக்ரேனின் உதவி தேவை என்று கேட்டுக் கொண்டார். அமைதியான முறையில் நிலைமையை கொண்டு செல்ல இந்தியாவின் பங்களிப்பு எப்போதும் இருக்கும் என்று மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெலன்ஸ்கி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். அப்போது, உக்ரேனை விரட்டும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் போக்கைப் பற்றியும் தெரிவித்தேன். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் எங்கள் மண்ணில் உள்ளனர். அவர்கள் குடியிருப்பு கட்டிடங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் எங்களுக்கு அரசியல் ரீ்தியாக ஆதரவு வழங்க இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ளோம். ஆக்கிரமிப்பாளரை சேர்ந்து தாக்குவோம் என்று தெரிவித்துள்ளேன்," என்று உக்ரேன் ஜனாதிபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
என்னை சிறைப்படுத்தும் ரஷ்யாவின் திட்டம் முறியடிக்கப்பட்டது
உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது, ஒரே இரவில் தன்னை சிறைப்படுத்தி, தங்கள் தலைவரை நிறுத்துவதற்கான ரஷ்யாவின் திட்டத்தை உக்ரேன் படைகள் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார்.

மேலும், உக்ரேன் மீதான படையெடுப்பை நிறுத்துமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என, ரஷ்ய மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய நகரங்களில் உக்ரேன் படைகள் கட்டுப்பாட்டில் உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராகும் உரிமையை பெற்றதாகவும் அவர் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரேன் தற்போது உறுப்பினராக இல்லை. ஆனால் அதில் சேருவதற்கான விருப்பங்களை அந்நாட்டின் அரசியலமைப்பு உள்ளடக்கியுள்ளது.

உக்ரைனை அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்குங்கள்- ரஷிய ராணுவத்திற்கு உத்தரவு

உக்ரேன் தாக்குதலை நிறுத்தினால் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறினார்.
உக்ரேனை அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்குங்கள்
உக்ரேன் மீது ரஷ்ய படைகள் 3 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரேன் தாக்குதலை நிறுத்தினால் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறினார். ஆனால் பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை தற்போது இல்லை.

இந்நிலையில், உக்ரேனை அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்கும்படி ரரஷ்ய ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர உக்ரேன் மறுத்துவிட்டதாக கிரெம்ளின் மாளிகை குற்றம்சாட்டிய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, இனி உக்ரேன் மீதான தாக்குதல் மேலும் தீவிரமடையும். தலைநகரை கைப்பற்றுவதற்கு கூடுதல் படையினர் வரவழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment