(எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தனக்கு அனுப்பட்டுள்ள அறிவித்தலை இரத்து செய்து தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பில் மன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சட்டமா அதிபருக்கு அறிவித்தல் அனுப்பட்டுள்ளது. மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று (25) இந்த அறிவித்தலை அனுப்பியது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன தலைமையிலான டி.எம்.சமரகோன் மற்றும் லபார் தாஹிர் அகியோரை உள்ளடக்கிய நீதிபதிகள் குழாம் சட்டமா அதிபருக்கான குறித்த அறிவித்தலை அனுப்ப உத்தரவிட்டது.
அதன்படி எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி மன்றில் ஆஜராகி விளக்கமளிக்க அறிவித்தல் அனுப்பட்டுள்ளது.
இந்த ரிட் மனுவின் பிரதிவாதிகளாக அரசியல் பழி வாங்கல் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் தலைவராக செயற்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன உள்ளிட்டவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்றையதினம் மன்றில் ரணில் விக்ரமசிங்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, தனது சேவை பெறுநர் ஏற்கனவே அரசியல் பழி வாங்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு தனக்கு எதிராக செய்துள்ள பரிந்துரைகளை எதிர்த்து மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
இவ்வாறான பின்னணியில், அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியுமான பின்னணி தொடர்பில் ஆராய நியமிக்கப்ப்ட்டுள்ள விஷேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தனது சேவைப் பெறுநரை எதிர்வரும் 28 ஆம் திகதி ஆணைக் குழு முன் ஆஜராகிமாறு அரிவித்தல் அனுப்பியுள்ளதாக ஜனாதிபதிசட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா சுட்டிக்காட்டினார்.
எனவே 28 ஆம் திகதி ஆஜராக கோரும் அறிவித்தலை தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு ரணில் விக்ரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மேன் முறையீட்டு நீதிமன்றைக் கோரினார்.
இந்நிலையில் விடயங்களை ஆராய்ந்த மேன் முறையீட்டு நீதிமன்றம், எதிர்வரும் 2 ஆம் திகதி சட்டமா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளை மன்றில் ஆஜராகி விளக்கமளிக்க அறிவித்தல் அனுப்பியது.
No comments:
Post a Comment