இலங்கை மீதான அறிக்கைக்கு அன்றையதினமே பதிலளிக்க முடிவு : அமைச்சர்கள் பீரிஸ், அலி சப்ரி தலைமையில் குழுவினர் தயார் நிலையில் : எவருக்கும் அஞ்சி தனது நிலைப்பாட்டிலிருந்து இலங்கை விலகாது எனவும் அரச தரப்பு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, February 27, 2022

இலங்கை மீதான அறிக்கைக்கு அன்றையதினமே பதிலளிக்க முடிவு : அமைச்சர்கள் பீரிஸ், அலி சப்ரி தலைமையில் குழுவினர் தயார் நிலையில் : எவருக்கும் அஞ்சி தனது நிலைப்பாட்டிலிருந்து இலங்கை விலகாது எனவும் அரச தரப்பு அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 49 வது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிறது. 

இலங்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் அன்றையதினம் மனித உரிமை ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கைக்கு அன்றே பதிலளிப்பதற்கு அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது.

ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையின் சார்பில் ஜெனீவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், நீதியமைச்சர் அலி சப்ரி ஆகியோர் அது தொடர்பில் தெரிவிக்கையில்,

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கைக்கு உரிய பதில் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கும் இலங்கையின் நிலைப்பாட்டினை ஆணித்தரமாக முன்வைப்பதற்கும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையிலிருந்து சென்றுள்ள இராஜதந்திர தூதுக்குழுவினருக்கு ஐ.நா மனித உரிமைப் பேரவையின் சவால்களை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 49 வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் அமர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளன.

ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் தொடர்பில் அமைச்சர்கள் இருவரும் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா மனித உரிமைப் பேரவை தொடர்ச்சியாக இலங்கை தொடர்பில் முன்வைத்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஐ.நா மனித உரிமை பேரவையிலும் சர்வதேச ரீதியிலும் நாடுகள் அமைப்புக்கள் என இலங்கைக்கு எதிராக பெரும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அதனை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வோம்.

அது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நீதியமைச்சர் அலி சப்ரி, ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் இலங்கைக்கு அனுப்பியுள்ள அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன் அதற்கான பதில் அறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் சார்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைப் பொறுத்தவரை மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகள். பயங்கரவாத தடைச்சட்டத்தின் மறுசீரமைப்பு போன்ற விடயங்களில் அரசாங்கம் நியாயமாக செயற்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கில் நீதித்துறை சம்பந்தமான வேலைத் திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் பல வழக்குகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

காணி வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளில் தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகள் 90 வீதம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள காணிகளையும் மீளப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment