தேசிய ஒலிம்பிக் குழுவின் அங்கத்தவராக சாய்ந்தமருதைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் அலியார் பைசர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தினை தேசிய ஒலிம்பிக் குழு 01.02.2022 திகதியிட்டு அனுப்பி வைத்துள்ளது.
விளையாட்டுத் துறையின் பல்வேறு பிரிவுகளிலும் முதன்மை வகிக்கும் இவர், அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக பயிற்சி பெற்று, கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றியதுடன் தற்பொழுது நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலையில் உடற்கல்வி ஆசிரியராக சேவையாற்றி வருகிறார்.
அலியார் பைஸர் ஆசிரியர், இலங்கையின் தேசிய விளையாட்டுச் சங்கங்களையும், சம்மேளனங்களையும் ஆளும் நிறுவனமானதும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் நேரடி பிரதிநிதியாகவும் செயற்படும் தேசிய ஒலிம்பிக் கவுன்சிலின் அதியுயர் குழுவான கல்விக்குழு உறுப்பினராக 2022/2026 நான்கு ஆண்டுகள் காலப்பகுதிக்கு தெரிவு செய்யப்பட்டு கிழக்கு மாகாணத்திற்கும் கல்முனை பிரதேசத்திற்கும் வரலாற்று தடயத்தை பதித்து பெருமை சேர்த்துள்ளார்.
விளையாட்டுத்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அதிகமான வீரர்களுக்கு விளையாட்டுத்துறை சார் தொழிற்றகைமைகளை ஏற்படுத்தி தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வாய்ப்புக்களைப் பெற வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ள இவர் கிழக்கு மாகாணத்தில் பல விளையாட்டு ஆளுமைகளை உருவாக்கியுள்ளார்.
2020ம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலினால் நடாத்தப்பட்ட தேசிய அணி முகாமையாளர்களுக்கான விஷேடவிளையாட்டு நிர்வாக பயிற்சிநெறியில் உயர்தர சித்தியடைந்தது மட்டுமல்லாது IOC யின் Athletes 365 பாடநெறிகள் இரண்டிலும் அதியுயர் சித்தியடைந்துள்ளார். இதன் மூலம் விளையாட்டுத்துறையில் சிறந்த நிருவாக அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
குறிப்பாக இவர் பட்மின்டன், காற்பந்து, தடகளம் போன்ற துறையில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக தடம்பதித்துள்ளார். கிரிக்கட்டில் பயிற்றுவிப்பு, நடுவர், புள்ளிக் கணிப்பாளர் ஆகிய மூன்று துறைகளிலும் சித்தியடைந்து தகைமைபடைத்துள்ளார்.
2012 யில் ஈரானில் நடைபெற்ற U-19 ஆசிய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு மத்தியஸ்தராக கடமையாற்றியதுடன் சிறந்த நடுவர் என்ற விருதையும் பெற்றுள்ளார்.
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் செயலாளரான இவர் முன்னால் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கத்தின் மத்தியஸ்தர் குழு தவிசாளராகவும் இணைப்பாளராகவும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் மட்டு/அம்பாறை மாவட்ட இணைப்பாளராகவும் பயிற்றுவிப்பாளராகவும் கல்வி அமைச்சின் கல்முனை வலய இணைப்பாளராகவும் இருந்துள்ளார்.
இவர் கிழக்கு மாகாணத்தில் கிண்னியா, மூதுர், ஓட்டமாவடி, கல்குடா, காத்தான்குடி மற்றும் அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக்குகள் உருவாக்குவதற்கு தீவிரமாக இயங்கியவராவார்.
கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் பல விளையாட்டுக்களை புதிதாக அறிமுகம் செய்து இப்பாடசாலையை தேசிய மட்ட போட்டிகளில் வெற்றிகளையும் சாதனைகளையும் ஏற்படுத்தி இப்பாடசாலை பெட்மின்டன் அணியை மலேசியாவுக்கு அழைத்துச் சென்று வரலாற்று சாதனைபடைத்துள்ளார்.
இவர், இலங்கை பெட்மின்டன் சங்கத்தின் உதவிப் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண பெட்மின்டன் சங்கத்தின் ஸ்தாபகராகவும், செயலாளராகவும் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபக பொதுச் செயலாளரும் கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார். பிரதேச முக்கிய அமைப்புக்களின் நிர்வாகியாகவும் செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment