(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தாக்குதலுக்கு இலக்காகும் அபாயம் உள்ளதாக தகவல் வழங்கிய, லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் பிராந்திய அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகார எழுத்தாளரான கீர்த்தி ரத்நாயக்க என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6 மாத தடுப்புக் காவலின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
50 ஆயிரம் ரூபா பெறுமதியிலான சொந்தப் பிணையில் செல்ல கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே இதற்காகன உத்தரவைப் பிறப்பித்தார்.
1979 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் 5 (1) ஆ பிரிவின் கீழ், பயங்கரவாத நடவடிக்கை தொடர்பில் தகவல் கிடைத்தும் அதனை பாதுகாப்பு தரப்புக்கு வழங்காமை தொடர்பில் பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதும், அத்தகைய குற்றச்சாட்டு ஒன்றினை சுமத்த அவருக்கு எதிராக போதுமான சான்றுகள் இல்லை என சட்டமா அதிபர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே அவரை சொந்த பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
லங்கா ஈ நியூஸ் தளத்துக்கு அவர் எழுதிய ஆக்கங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக சி.ஐ.டி.யினர் மன்றுக்கு தெரிவித்த நிலையிலேயே அவர் பிணையில் இவ்வாறு விடுவிக்கப்பட்டார்.
அவரை ஒவ்வொரு ஞாயிறும் தினமும் சி.ஐ.டி.யில் ஆஜராக நிபந்தனை விதிக்குமாறு சி.ஐ.டி.யினர் நீதிமன்றைக் கோரிய போதும், எந்த அடிப்படையும் இல்லாத நிலையில் அதற்கான உத்தரவைப் பிறப்பிக்க முடியாது எனவும் நீதிவான் மறுத்தார்.
இதனிடையே, தனது கைது மற்றும் தடுப்புக் காவலுக்கு எதிராக கீர்த்தி ரத்நாயக்க 10 கோடி ரூபா நட்ட ஈடு கோரி உயர் நீதிமன்றில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட 20 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment