சுகாதார துறைக்கு அரசாங்கம் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது : நான் ஒரு போதும் வைத்தியசாலைகளில் அரசியல் செய்ததில்லை - அதாஉல்லா எம்.பி - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 1, 2022

சுகாதார துறைக்கு அரசாங்கம் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது : நான் ஒரு போதும் வைத்தியசாலைகளில் அரசியல் செய்ததில்லை - அதாஉல்லா எம்.பி

நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருந்த கால கட்டத்திலும் அரசாங்கம் சுகாதார துறைக்கு கூடுதலான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதாக, தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

சுகாதார அமைச்சினால் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தினை ஆரம்பித்து ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு, கொவிட்-19 காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சுகாதார உத்தியோகத்தர்களை பாராட்டும் வைபவம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் ஆஸாத் எம். ஹனீபா தலைமையில் சனிக்கிழமை (29) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வைத்தியத்துறை ஒரு புனிதமான துறையாகும். இதில் யாரும் கட்சி வேறுபாடுகளோ, சமயங்களோ பார்ப்பதில்லை. சுகாதாரதுறை ஒரு நாட்டின் உயிர்நாடியாகும். கடந்த காலங்களில் எமது நாட்டில் ஏற்பட்ட கொரோனாத் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு சுகாதார துறையினர் அர்ப்பணிப்புடன் பாடுபட்டனர்.

வைத்தியசாலைகளில் அரசியல் தலையீடுகள் இருக்க முடியாது. நான் ஒரு போதும் வைத்தியசாலைகளில் அரசியல் செய்ததில்லை. மாறாக எந்த வைத்தியசாலையை எடுத்துக் கொண்டாலும் இப்பிரதேசத்தில் அபிவிருத்தியே செய்துள்ளேன்.

ஒவ்வொரு கிராமங்கள் தோறும் வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் காணப்படுகின்றதென்றார்.

இவ் வைபவத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் சக்கி, தவிசாளர் எம்.ஏ. றாசிக் உட்பட பொலிஸ், இராணுவ அதிகாரிகளும், சுகாதார துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

(ஒலுவில் விசேட நிருபர்)

No comments:

Post a Comment