(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கமும் சட்டமா அதிபர் திணைக்களமும் தோல்வியடைந்துள்ளமை எமக்கு ஆச்சரியத்தையும் கவலையையும் அளிக்கிறது.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பை நாடுவதைத் தவிர வேறு மாற்றுவழியில்லை என்று இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை கவலை வெளியிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய உண்மைகளை வெளிப்படுத்தல் காலம் தாழ்த்தப்படுவது மாத்திரமின்றி, அவற்றை மறைப்பதற்கும் , அரசியல் இலாபத்திற்காக அதனை பயன்படுத்திக் கொள்வதன் ஊடாக பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குவதற்கும் முயற்சிக்கப்படுகின்றமையும் தெளிவாகத் தெரிவதாகவும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீதி மற்றும் நியாயத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்வதைத் தவிர வேறு மாற்றுவழியில்லை என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 1,000 நாட்கள் கடந்துள்ளன. நூற்றுக்கும் அதிக அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டன. இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பன உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளமை தொடர்பில் ஆச்சரியமடைவதோடு , கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உண்மைகளை வெளிப்படுத்தல் காலம் தாழ்த்தப்படுவது மாத்திரமின்றி , அதனை மறைப்பதற்கும் , அரசியல் இலாபத்திற்காக இந்த கொலைகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குவதற்கும் முயற்சிக்கப்படுவதாக தெரிகிறது.
எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் நியாயத்தையும் பெற்றுக் கொடுப்பதற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதைத் தவிர வேறு மாற்று வழி எமக்குத் தெரியவில்லை.
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை மேற்கூறப்பட்ட மாற்று வழிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை அவர்களுடன் இணைந்து தொடர்ந்தும் போராடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment