5 முதல் 12 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அவதானம் : வைத்தியர் ஜீ.விஜேசூரிய - News View

About Us

About Us

Breaking

Saturday, February 26, 2022

5 முதல் 12 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அவதானம் : வைத்தியர் ஜீ.விஜேசூரிய

(எம்.மனோசித்ரா)

நாட்டில் 12 - 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியை வழங்குவது தொடர்பிலும் , 5 - 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசியை வழங்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு - சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.

நாட்டில் தற்போது சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் அதிகரித்து வருகின்ற நிலையில் , அவர்களது பாதுகாப்பின் நிமித்தம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடளாவிய ரீதியிலுள்ள சகல வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எனவே 12 - 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் அனைவரையும் முதற்கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறும், 16 - 19 வயதுக்கு இடைப்பட்டவர்களை இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் , 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் மூன்றாம் கட்ட தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.

12 - 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியை வழங்குவதற்கான ஆலோசனைகள் விசேட வைத்திய நிபுணர்கள் குழுவிடம் கோரப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றால் எதிர்வரும் காலங்களில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அத்தோடு 5 - 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் குழுவிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். அவர்களது ஆலோசனை கிடைக்கப் பெற்ற பின்னர் அதுகுறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

இந்நிலையில் நாட்டில் இதுவரையில் 7 இலட்சத்து 13 578 பேர் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை அஸ்ட்ரசெனிகா முதற்கட்ட தடுப்பூசியை 1 479 631 பேரும், 1 418 593 பேர் இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதே போன்று 12 017 914 பேர் சைனோபார்ம் தடுப்பூசியையும் முதற்கட்டமாகவும், 11 088 519 பேர் இரண்டாம் கட்டமாகவும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்புட்னிக் தடுப்பூசியை முதற்கட்டமாக 159 110 பேரும், 155 812 பேர் இரண்டாம் கட்டமாகவும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

பைசர் தடுப்பூசியை 2 428 867 பேர் முதற்கட்டமாகவும் , 705 376 பேர் இரண்டாம் கட்டமாகவும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும் மொடர்னா தடுப்பூசியை 804 201 பேர் முதற்கட்டமாகவும், 787 361 பேர் இரண்டாடம் கட்டமாகவும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment