(எம்.எப்.எம்.பஸீர்)
இலங்கையில் அமைந்துள்ள ரஷ்யன் எடுக்கேஷன் சென்டர் எனும் ஆர்.ஈ.சி. கெம்பஸ் நிறுவனத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக வீடியோவை, யூடியூப் வலைத்தளத்தில் தொடர்ந்தும் ஒளிபரப்புவதை தடுத்து, அமெரிக்காவின், களிபோர்னியாவில் உள்ள YouTube LLC நிறுவனத்துக்கும், கொழும்பு டுடே எனும் யூடியூப் அலைவரிசையின் கீர்த்தி துனுவில என்பவருக்கும் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிபதி அருன அளுத்கே இந்த இடைக்கால தடை உத்தரவை, குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை செல்லுபடியாகும் வண்ணம் பிறப்பித்தார்.
மருத்துவப் பட்டங்களை வழங்கும் வெளிநாடுகளில் மருத்துவக் கல்வியை வழங்கும் இலங்கையில் உள்ள ரஷ்ய பல்கலைக்கழக நிறுவனம் (REC Campus Institute) தாக்கல் செய்த வழக்கை பரிசீலித்த கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.
தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில், அவமதிப்பு வீடியோ ஒன்றினை ஒளிபரப்புவதாக கூறி, ரஷ்யன் எடுக்கேஷன் சென்டர் எனும் நிறுவனம், யூடியூப் நிறுவனத்துக்கும், கொழும்பு டுடே எனும் யூடியூப் தொலைக்காட்சி அலைவரிசையின் கீர்த்தி துணுவிலவுக்கும் எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
குறித்த அவமதிப்பு வீடியோவில், மனுதாரரான ரஷ்யன் எடுக்கேஷன் கெம்பஸ், மாணவர்களிடமிருந்து மோசடியாக பணம் பறிப்பதாக கூறப்பட்டுள்ளதாகவும், அதனால் பொதுமக்களிடையே மனுதாரர் நிறுவனத்துக்கு பாரிய தலை குணிவு ஏற்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் மன்றுக்கு தெரிவித்தனர்.
யூடியூப் நிறுவனம், வணிக ரீதியிலான இலாபத்தை மட்டும் கருத்திற் கொண்டு, உண்மை மற்றும் நபர்களின் அடையாளம் உள்ளிட்டவற்றை உறுதி செய்துகொள்ளாமல், சமூக வலைத்தளத்தில் பல்வேறு அலைவரிசைகளை உருவாக்கிக் கொள்ள சந்தர்ப்பம் வழங்குவதாகவும், உண்மையான அடையாளம் மற்றும் முகவரி இல்லாமல் 'கொழும்பு டுடே' எனும் பெயரில் அலைவரிசையை உருவாக்க YouTube LLC நிறுவனம் அனுமதியளித்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பு நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது.
அத்துடன் யூ ரியூப் அலைவரிசை பதிவின் போது, கொழும்பு டுடே எனும் அலைவரிசைக்கு முகவரியாக வழங்கப்பட்டுள்ள முகவரி கூட பொய்யானது எனவும் வழங்கப்பட்டுள்ள முகவரி லண்டன் நகரில் அமைந்துள்ள விநோத நடவடிக்கைகளுக்கான ஒரு இடத்தை குறிப்பதாகவும் மனுதாரர் தரப்பு நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
முழு உலகுகிலும் கடும் செல்வாக்குள்ள யூரியூப் நிறுவனம், தனி இறைமை கொண்ட நாடொன்றின் சட்டங்களை மதிக்காமல் செயற்பட முடியாது எனவும், வேறு இறைமை மிக்க நாடொன்றின் சட்டங்கள் ஊடாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிறுவனம் ஒன்றை அவமதிக்கும் உரிமை அமெரிக்காவிலிலுருந்து செயற்படும் பிரதிவாதி நிறுவனமான யூடியூப் இற்கு இல்லை எனவும் மனுதாரர் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர்.
இதன்போது, பிரதிவாதிகளில் ஒருவரான கொழும்பு டுடே யூடியூப் அலைவரிசையின் கீர்த்தி துனுவில சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி, மக்களின் தகவல் அறியும் உரிமையை தக்க வைத்துக் கொண்டு, முறைப்பாட்டாளரான தனியார் கல்வி நிறுவனம் தொடர்பில் தகவல்களை யூடியூப் அலைவரிசை ஊடாக வெளியிட்டதாக குறிப்பிட்டார். இந்நிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அவர் கோரினார்.
முறைப்பாட்டாளர் மோசடியில் ஈடுபடுவதாக பிரதிவாதிகள் கூறினாலும், முறைப்பாட்டாரான நிறுவனம் நற் பெயருடன் கூடிய நிறுவனம் என்பதை பிரதிவாதிகள் ஏற்றுக் கொள்வதாக சுட்டிக்காட்டிய நீதிபதி அருன அளுத்கே, இலாமபீட்டும் நோக்கில் பணம் அறவிடுதல் மோசடி நடவடிக்கை அல்ல என குறிப்பிட்டார்.
அதன்படி, பிரதிவாதி தரப்பினரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, வழக்கு விசாரணை முடியும் வரை ரஷ்யன் எடுக்கேஷன் சென்டர் எனும் ஆர்.ஈ.சி. கெம்பஸ் நிறுவந்தின் நற் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக வீடியோவை, யூடியூப் வலைத் தளத்தில் தொடர்ந்தும் ஒளிபரப்புவதை தடுத்து, இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தார்.
வழக்கு தொடர்பிலான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளர் தரப்புக்காக சுதத் பெரேரா சட்ட நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய சட்டத்தரணி நயோமி சேத்தனா மற்றும் சட்டத்தரணி மனோஜ் பண்டார ஆகியோர் ஆஜராகினர்.
No comments:
Post a Comment