(ஆர்.யசி)
பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நேரத்தில் நிதி முகாமைத்துவத்தை அரசாங்கம் எவ்வாறு கையில் எடுக்க முடியும். இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் உடன்படிக்கை சட்டத்திற்கு முரணானது என கூறும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, நாட்டின் ஆட்சி கொள்ளையர்களின் கைகளில் சிக்கிக் கொண்டுள்ளது எனவும் விமர்சித்தார்.
அரசாங்கத்தின் தீர்மானங்கள் மற்றும் இரகசியமாக அரசாங்கம் முன்னெடுக்கும் ஒப்பந்தங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அத்துடன் வரவு செலவு திட்ட விவாதங்களை நடத்திவிட்டு நிதி அமைச்சர் அவசர ஊடக சந்திப்பை நடத்தி புதிய வரவு செலவு திட்டமொன்றை முன்வைக்கின்றார். இவ்வாறு செயற்பட முடியுமா? இவ்வாறு ஆட்சி நடத்துவது சரியா? கடன் முகாமைத்துவ ஆணைக்குழு ஏன் அமைதியாக உள்ளது.
ஆட்சி இன்று கொள்ளையர்கள் கைகளுக்கு சென்றடைந்துள்ளது. பணம் இல்லையென்றால் வளங்கள் விற்கப்படுகின்றன. நாட்டில் கருப்பு பொருளாதார கொள்கையொன்று உருவாக்கிக் கொண்டுள்ளது. வளங்களை விற்று விற்று இறுதியாக நாடு எங்கு சென்று நிற்கப்போகின்றது என்ற பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் இன்று அரசாங்கத்தின் மீதான அச்சத்தில் உள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுக் கொண்டுள்ள நிலையில், மக்களால் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாதுள்ள நிலையில் அரசாங்கத்தை எதிர்க்கு கேள்வி கேட்கவும் மக்கள் அச்சப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment