4 வலயங்களாக பிரித்து மின் வெட்டு : அட்டவணை வெளியீடுள்ள இலங்கை மின்சார சபை - News View

Breaking

Monday, January 10, 2022

4 வலயங்களாக பிரித்து மின் வெட்டு : அட்டவணை வெளியீடுள்ள இலங்கை மின்சார சபை

நாட்டை 4 வலயங்களாக பிரித்து, பி.ப. 5.30 முதல் இரவு 9.30 மணி வரை தினமும் ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய திங்கள் முதல் சனிக்கிழமை வரை, தினமும் சுழற்சி முறையில், இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொலர் பிரச்சினை காரணமாக, இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபனம் (CPC) அனல் மின் நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளமை காரணமாகவும், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பிரிவு மூடப்பட்டுள்ளமை, கெரவலப்பிட்டியிலுள்ள யுகதனவி தொகுதியின் பராமரிப்பு பணிகள், களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளாறு போன்ற விடயங்கள் காரணமாக மின் வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் திட்டமிடப்பட்ட மின் வெட்டுகளை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில் மின் வெட்டு விவகாரம் தொடர்பில், மின்சாரம் மற்றும் வலுச்சக்தி துறைகளின் தலைவர்களுடன் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின்சார நெருக்கடிக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

இவ்வாறான பின்னணியிலேயே இலங்கை மின்சார சபை திட்டமிடப்பட்ட மின்வெட்டு தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment