அப்பம் சாப்பிட்ட கதையின் இரண்டாம் பாகத்தை அரங்கேற்ற முன் சுந்திரக் கட்சியை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றுவது சிறந்தது - திலும் அமுனுகம - News View

About Us

About Us

Breaking

Sunday, January 16, 2022

அப்பம் சாப்பிட்ட கதையின் இரண்டாம் பாகத்தை அரங்கேற்ற முன் சுந்திரக் கட்சியை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றுவது சிறந்தது - திலும் அமுனுகம

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைக்கும் ஒப்பந்தத்தை சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தற்போது செயற்படுத்துகிறார். அப்பம் சாப்பிட்ட கதையின் இரண்டாம் பாகத்தை அரங்கேற்ற முன் சுந்திரக் கட்சியை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றுவது சிறந்ததாக அமையும் என அரசாங்கத்தில் உரிய தரப்பினருக்கு தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

நிகழ்கால அரசியல் நிலவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன 2014 ஆம் ஆண்டு தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒரு மேசையில் அமர்ந்து அப்பம் சாப்பிட்டு அடுத்த நாள் காலையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதை எவரும் மறக்கவில்லை.

சூழ்ச்சிகளுக்கு மத்தியில் தோற்றம் பெற்ற தேசிய அரசாங்கத்தை சிறந்த முறையில் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுத்து செல்லவில்லை. ஐந்து வருட கால ஆட்சியும் பலவீனமடைந்ததால் நாட்டு மக்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள்.

2019ஆம் ஆண்டு சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அரசாங்கத்தில் ஒன்றிணைந்த போதிலும் அவர்களின் செயற்பாடு குறித்து எந்நிலையிலும் அவதானத்துடன் செயற்படுகிறோம்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் சுதந்திர கட்சியை ஒன்றிணைக்கும் ஒப்பந்தத்தை சுதந்திர கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தற்போது செயற்படுத்துகிறார். 2014ஆம் ஆண்டு அப்பம் சாப்பிட்ட கதையில் இரண்டாம் பாகத்தை மீண்டும் அரங்கேற்ற இடமளிக்க கூடாது.

சுதந்திர கட்சியினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் அவர்களை வெளியேற்றுவது அரசாங்கத்திற்கு பாதுகாப்பானதாக அமையும் என்பதை அரசாங்கத்தின் உயர் தரப்பினரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதால் அரசாங்கத்தின் இருப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது பயனற்றது. ஆகவே சுதந்திர கட்சியினர் அரசாங்கத்தில் இருந்து தாராளமாக வெளியேறலாம் என்பதை பலமுறை பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளோம்.

அரசாங்கத்தின் கொள்கையுடன் இணங்க முடியாவிடின் தாராளமாக வெளியேறலாம் என ஜனாதிபதி பொதுவாக குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. மக்களின் நலனை கருத்திற் கொண்டு இனிவரும் நாட்களில் கடுமையான தீர்மானங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment