அநுரகுமாரவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் எவன்ட்கார்ட் நிறுவனமே பொறுப்பு : அரசாங்கத்தின் இயலாமையையும், தோல்வியும் வெளிப்படுகின்றன - விஜித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Monday, January 31, 2022

அநுரகுமாரவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் எவன்ட்கார்ட் நிறுவனமே பொறுப்பு : அரசாங்கத்தின் இயலாமையையும், தோல்வியும் வெளிப்படுகின்றன - விஜித ஹேரத்

(எம்.மனோசித்ரா)

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் வாகனத்தின் மீது முட்டை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதன் பின்னணியில் எவன்ட்கார்ட் நிறுவனமும், அரசியல் தலையீடும் காணப்படுகிறது. எதிர்காலத்தில் அநுரகுமார திஸாநாயக்கவின் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு எவன்ட்கார்ட் நிறுவனமே பொறுப்புக்கூற வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வலியுறுத்தினார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கம்பஹாவில் இடம்பெற்றதைப் போன்றதொரு சம்பவம் இதற்கு முன்னர் திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பான போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதும் இடம்பெற்றது. அந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் இனங்காணப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அதே போன்று இந்த தாக்குதல்களை நடத்தியவர்களும் காணொளிகள், புகைப்படங்கள் ஊடாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் ஒருவர் மஹகெதர விஜயாராச்சிலாகே ரத்மல் அசிதகுமார விஜேரத்ன என்ற நபராவார். இவர் மிரிஸ்வத்தை - மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்தவராவார்.

இந்த நபர் கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். அதற்கு பெயர் மாற்றத்திற்கு முன்னர் இவரது பெயர் கெப்ரியல் ரத்மல் அசிதகுமார என்பதாகும். இதேபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளமையில் காரணமாகவே அவர் இவ்வாறு பெயர் மாற்றம் செய்துள்ளார்.

இனங்காணப்பட்ட மற்றைய நபர் ஆனந்த பண்டார என்ற கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவர் எவன்ட்கார்ட் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியுள்ளார். இவரது வாக்கு மூலத்திலும் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவன்ட்கார்ட் நிறுவனத்தின் சீருடையுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் ஊடாக இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த சம்பவத்தின் பின்னணியில் எவன்ட்கார்ட் நிறுவனம் இருப்பது மிகத்தெளிவாக புலப்படுகிறது.

புறக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கும் இவர்களே காரணம் என்ற தகவல் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

எவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவரான நிஸ்ஸங்க சேனாதிபதி ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர் ஆவார். இந்த பின்னணியின் அடிப்படையில் அவதானிக்கும் போது இவற்றில் அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றமையும் தெளிவாகிறது.

இவ்வாறான செயற்பாடுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் இயலாமையையும், தோல்வியையுமே வெளிப்படுத்துகின்றன. மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது கடும் எதிர்ப்புக்கள் தோன்றியுள்ளன. அதனை மறைப்பதற்காகவே இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

No comments:

Post a Comment