அனுரகுமாரவின் வாகனத்தின் மீது முட்டை, கல் வீச்சு தாக்குதல் : பிடிபட்டவர்கள் அமைச்சர் பிரசன்னவின் ஆதரவாளர்களாம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 31, 2022

அனுரகுமாரவின் வாகனத்தின் மீது முட்டை, கல் வீச்சு தாக்குதல் : பிடிபட்டவர்கள் அமைச்சர் பிரசன்னவின் ஆதரவாளர்களாம்

(எம்.எப்.எம்.பஸீர்)

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனம் மீது அழுகிய முட்டைகள் மற்றும் கற்களைக் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள சம்பவம் கம்பஹா மாவட்டம் கலகெடிஹேனவில் பதிவாகியுள்ளது.

நேற்று (30) மாலை வேளையில், கலகெடிஹேன கிளாஸ் கோ மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள சென்றபோது, அந்த மண்டபத்தின் பிரதான வாயிலுக்கு அருகே வைத்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் கூறினர்.

இதன்போது அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத போதும், மாநாட்டில் கலந்துகொள்ள சென்று கொண்டிருந்த ஒருவர் கல் வீச்சினால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பிரதானி ஒருவர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்து தனது வாகனத்தை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மண்டபத்தை நோக்கி செல்லும் போது இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து, அக்கட்சியின் ஆதரவாளர்கள், தாக்குதல் நடாத்திய கும்பலை துரத்திச் சென்றுள்ளனர். இதன்போது இருவர் பிடிபட்டுள்ளதுடன் ஏனையோர் தப்பியோடியுள்ளனர்.

கட்சி ஆதரவாளர்களால் பிடிக்கப்பட்ட இருவரும் நிட்டம்புவ பொலிஸாரிடம் பின்னர் ஒப்படைக்கப்பட்டதாகவும், பொலிஸார் இது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் நிட்டம்புவ பொலிசார் கூறினர்.

பிடிபட்ட இருவர் மீதும் கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடாத்தியுள்ள நிலையில், குறித்த சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸாரினால் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான காட்சிகள் அருகில் உள்ள சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ள நிலையில், பிடிக்கப்பட்ட இருவரும் தாம் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிடிபட்டவர்களில் ஒருவர் முன்னாள் இராணுவ வீரர் எனவும் அவர் தற்போது எவன்கார்ட் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த முட்டை தாக்குதலுக்கு 16 பேர் கொண்ட குழு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன், ஏனையோர் தப்பிச் சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

மற்றைய நபர் இந்த மாட்டின் மீது முட்டை தாக்குதல் நடாத்த தனக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டதாகவும், அவ்வாறு அந்த பணத்தை வழங்கியவர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் மிக நெருங்கிய சகாவான வீரசிங்க என்பவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த தேசிய மக்கள் சக்தி மாநாட்டை குழப்பும் நடவடிக்கையின் பின்னணியில், கம்பஹா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க செயற்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதுடன் அது தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் அவர் மீது பரவலான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment