(நா.தனுஜா)
பணவீக்க உயர்வு, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை, மின் விநியோகத் தடை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இனியும் தாமதிக்காமல் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சீரமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொருளாதாரத்தின் தற்போதைய எதிர்மறையான போக்கு சட்டத்தின் ஆட்சியிலும் நாட்டின் நிர்வாகத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
தற்போது முகங்கொடுக்கும் நெருக்கடிக்கு நிலைபேறான தீர்வை வழங்கக்கூடிய, அங்கீகரிக்கப்பட்ட நிதி வழங்கல் கட்டமைப்புக்களின் உதவியை நாடவேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மிக மோசமடைந்துவரும் நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, தீவிரமடைந்துவரக் கூடிய நிதி நெருக்கடி காரணமாக பொதுமக்கள் மத்தியில் சமத்துவமின்மை ஏற்படுவதுடன் அவர்கள் தமது உரிமைகளை அனுபவிப்பதிலும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்படும்.
அதுமாத்திரமன்றி சமூகத்திலுள்ள வறிய அல்லது இயலுமை மிகவும் குறைவான தரப்பினரே தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அங்கீகாரம் பெற்ற முக்கியமான அனைத்து தரப்படுத்தல் நிறுவனங்களாலும் இலங்கை தரமிறக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் 85 சதவீதமாகக் கணிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கடனளவு இப்போது 104 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது என்பதையும் ஏற்றுக் கொள்கின்றோம்.
இருப்பினும் அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புவதில் தோல்வி கண்டிருக்கின்றன என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment