வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப தொழிற்கல்வி கற்கை நெறிகளை ஆரம்பியுங்கள் : அரச கல்வி நிறுவனங்களுக்கு பிரதமர் மஹிந்த ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Monday, January 31, 2022

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப தொழிற்கல்வி கற்கை நெறிகளை ஆரம்பியுங்கள் : அரச கல்வி நிறுவனங்களுக்கு பிரதமர் மஹிந்த ஆலோசனை

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் தொழில் சார்ந்த தொழிற்கல்வி கற்கை நெறிகளை ஆரம்பிக்குமாறு தொழிற்பயிற்சி கற்கை நெறிகளை முன்னெடுக்கும் அரச நிறுவனங்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.

அதிகமான இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அலரி மாளிகையில் இன்று (31) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொழில்முறை மட்டத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தல் மற்றும் பாடசாலையிலிருந்து விலகி வெளிநாடு செல்லும் இளைஞர் யுவதிகளை அங்கு திறமையான தொழிலாளர்களாக பணிபுரிவதற்கு வழியேற்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

திறமையுள்ள போதிலும் பயிற்சி சான்றிதழ் அற்றவர்களுக்கு குறுகிய கால பயிற்சி மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தல், வெளிநாட்டு வேலை வாய்ப்பு சந்தையையும், இந்நாட்டு இளம் சமூகத்தினரையும் இணைக்கக்கூடிய ஒரு முறைமையை உருவாக்குவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவினால் தற்போது வேலை வாய்ப்புகள் உள்ள நாடுகள் மற்றும் வெற்றிடங்கள் காணப்படும் துறைகள் தொடர்பில் பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இளைஞர் விவகார அமைச்சு மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சு ஆகியன ஏற்கனவே இளைஞர் யுவதிகளுக்காக தொழில்சார் துறைகளை உள்ளடக்கும் வகையிலான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இலக்காகக் கொண்ட தொழிற்பயிற்சி கற்கை நெறிகளை ஆரம்பித்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

கடந்த 26ஆம் திகதி வரை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட வேலை வாய்ப்புகளில் ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, ருமேனியா, டோஹா கட்டார் உள்ளிட்ட 22 நாடுகளில் 183198 வேலை வாய்ப்புகளுக்கு பணியாளர்களை ஈடுபடுத்துவதற்கு தேவை உள்ளதாக மேற்படி கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான பிரியங்கர ஜயரத்ன, சீதா அரம்பேபொல, பிரதமரின் செயலாளர் திரு.அனுர திசாநாயக்க, பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ, தொழில் அமைச்சின் செயலாளர் எம்.பீ.டீ.யூ.கே. மாபா பதிரண, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுருத்த விஜேகோன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஏ.சேனாநாயக்க, திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் தீபா லியனகே, பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர ஜெனரல் மஹிந்த அதுருசிங்க உள்ளிட்ட நிறுவனத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment