முறையான பராமரிப்பின்றி சேதமடையும் காவத்தமுனை சிறுவர் பூங்கா : அசமந்த போக்குடன் நடந்து கொள்ளும் ஒட்டமாவடி பிரதேச சபை - News View

About Us

About Us

Breaking

Saturday, January 15, 2022

முறையான பராமரிப்பின்றி சேதமடையும் காவத்தமுனை சிறுவர் பூங்கா : அசமந்த போக்குடன் நடந்து கொள்ளும் ஒட்டமாவடி பிரதேச சபை

மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள காவத்தமுனை கிராமத்தில் 2015ஆம் ஆண்டு சிறுவர் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது.

சிறுவர் பூங்கா அமைக்கப்பட்ட அன்றுமுதல் ஒட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் நிருவாகத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்டது. இருந்தும் குறித்த பிரதேச சபையின் முறையான பராமரிப்பின்றி சேதமடையும் நிலைக்கு தற்பொழுது தள்ளப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர் பூங்காவினை கல்குடா தொகுதியிலுள்ள பல பிரதேச மக்களும் பயன்படுத்துவதுடன், பிரதேச சபையினால் சிறுவர் பூங்காவின் பிரதான நுழைவாயில் திறக்கப்படாததன் காரணமாக பூங்காவின் பாதுகாப்புக்காக சுற்றிவர அமைக்கப்பட்டுள்ள நெற் வேலியினை உடைத்து உட்சென்று மக்கள் பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இப்பூங்கா முறையான பராமரிப்பு இல்லாததன் காரணமாக சில விளையாட்டுப் பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன், தொடர்ந்தும் உராய்வு நீக்கிகள் இன்றி பயன்படுத்தப்பட்டால் அனைத்து பொருட்களும் சேதமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதான நுழைவாயில் பகுதியில் குறுக்கே கொந்துராத்துக்காரர்களால் கிரவல் குமியல்களாக கொட்டப்பட்டு வழி மறிக்கப்பட்டுள்ள அவல நிலையும் காணப்படுகின்றது.
இது தொடர்பில் அப்பிரதேசத்தில் வசித்துவரும் மூக செயற்பாட்டாளரான எம்.ஐ.எம். றனீஸ் கருத்து தெரிவிக்கையில் நான் பல தடவைகள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளரிடம் இந்நிலைமையினை சுட்டிக்காட்டி குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு கேட்டுக் கொண்டபோதும் அதில் அவர்கள் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை.

அத்துடன் காவத்தமுனை மக்களின் வாக்குகளினால் அப்பிரதேசத்திற்கு இரு பிரதேச சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டும் அவர்கள் இது தொடர்பில் ஆக்கபூர்வமான எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

மேலும் மக்களின் வரிப்பணத்தில் தங்களது பிரதேச சபை உறுப்பினர் பதவிக்காக மாதாந்தம் சம்பளம் பெற்றுக் கொள்ளும் இவர்கள் அக்கறை இன்றி இருப்பது காவத்தமுனை பிரதேசத்தின் அவலநிலையை எடுத்துக் காட்டுகிறது.

ஆகவே கௌரவ தவிசாளர் அவர்களே, காவத்தமுனை மக்கள் மிகவும் வருமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள், இப்பிரதேச மக்கள் வாரத்தில் ஓரிரு தடவைகளேனும் கூடுதலான செலவில்லாது அங்கு சென்று தனது பிள்ளைகளை மகிழ்வித்து சந்தோசமடைய வேண்டுமெனும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதே இந்த சிறுவர் பூங்கா.

எனவே வாரத்தில் குறைந்தது இரண்டு தடவைகளேனும் மாலை 2 மணி நேரமாவது தங்களது பிரதேச சபை ஊழியர்களில் ஒருவரை கொண்டு திறந்து அனைத்து விளையாட்டு பொருட்களுக்கும் உராய்வு நீக்கிகளை பூசி, நீர் மற்றும் வெளிச்ச வசதிகளை ஏற்படுத்தி முறையாக பராமரித்து மக்கள் பாவனைக்கு திறந்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

No comments:

Post a Comment