(எம்.ஆர்.எம்.வசீம்)
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று முன்னர் நான் கூறிவந்த போதும் இப்போதைய நிலைமையில் என்னால் அவ்வாறு உறுதியாக கூற முடியாது. அதனால் இந்த மாதத்தில் எவ்வேளையிலும் எரிபொருளுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்கான அபாயம் இருக்கின்றது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய எரிபொருள் நிலைமை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எரிபொருள் விநியோகத்தை விடவும் எரிபொருளுக்கான பணத்தை செலுத்துவதிலேயே பிரச்சினை உள்ளது. வரும் எரிபொருள் கப்பல்கள் 7, 8 நாட்களாக எரிபொருளை இறக்க முடியாத நிலைமையில் இருக்கின்றன.
வங்கி கடன் பத்திரங்கள் இன்றி எரிபொருள் கப்பல்களை கொண்டுவந்தாலும் அவற்றுக்குத் தேவையான டொலர்களை சேர்த்துக் கொள்ளும்வரை குறித்த எரிபொருள் அடங்கிய கப்பல்களை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க வேண்டி நிலை ஏற்பட்டிருக்கின்றது.
அத்துடன் டொலர் பிரச்சினையை கட்டுப்படுத்திக் கொள்ள நாங்கள் சீனாவிடம் 300 மில்லியன் டொலர் கடனை பெற்றோம். இந்தியாவிடம் 400 மில்லியன் டொலரை பெற்றோம். பங்களாதேஷிடம் 250 மில்லியன் டொலரை பெற்றோம். ஆனால் அவை அனைத்தும் ஒரு மாதத்திற்கு எரிபொருளை கொண்டு வர போதுமானது அல்ல. ஒரு மாதத்துக்கு எரிபொருள் கொண்டுவர 400 மில்லியன் டொலர் தேவைப்படுகின்றது.
இந்நிலையில் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்லும் நெருக்கடி நிலைமையில் எரிபொருள் தொடர்பில் நான் இதற்கு முன்னர் உறுதி மொழி வழங்கியதுபோல் தற்போது என்னால் வழங்க முடியாது. அதற்காக அவசரமாக சென்று எரிபொருளை நிரப்பிக் கொள்ள வேண்டியதில்லை. எதிர்வரும் தினங்களுக்கு தேவையான எரிபொருள் இருக்கின்றது.
இதற்கு முன்னர் போன்று தொகை களஞ்சியம் குறைவடைந்துள்ளது. எரிபொருள் முடியும் நிலையிலேயே இறக்குமதி செய்யப்படுகின்றது. அதனால் ஜனவரியில் எவ்வேளையும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக் கூடிய அபாயம் இருக்கின்றது.
ஆனால் அந்த அபாயம் உருவாக முன்னர் அது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்க எதிர்பார்க்கின்றேன். அதற்காக தட்டுப்பாடு ஏற்படும் வரை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம். அதற்கு தேவையான முடியுமான முயற்சிகளை மேற்கொள்வோம். அதன் காரணமாக பற்றாக்குறை ஏற்படாமலும் இருக்கலாம்.
என்றாலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமளிப்பதில்லை என முன்னர் தெரிவித்ததுபோன்று தற்போது என்னால் தெரிவிக்க முடியாமல் இருக்கின்றது. ஜனவரிக்கு பின்னர் ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம். ஏனெனில் பெப்ரவரியில் ஒரு சில நாடுகளில் நாள் கடன் வசதிகளை கேட்டிருக்கின்றேன். எனினும் ஜனவரி அவதானமிக்கதாகும் என்றார்.
No comments:
Post a Comment